
பெங்களூரு: கர்நாடக அரசு சொந்தமாக விமானங்களை வாங்கி விமான சேவையை தொடங்கவிருப்பதாக தொழில் துறை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் 100 நாட்கள் சாதனைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்ட அமைச்சர் எம்.பி.பாட்டீல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ’விமான நிலையங்களுக்கான நிலங்கள் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
இனிமேல் கர்நாடகாவில் விமான நிலையங்களை மாநில அரசே கட்டமைக்கும். ஷிவமொக்கா விமான நிலையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மாநில அரசு தான் அந்த விமான நிலையத்தை நிர்வகிக்கிறது. கர்நாடக அரசு சொந்தமாக விமான சேவையை தொடங்குவது குறித்து தீவிரமாக சிந்திக்கப்பட்டுவருகிறது. விஜயபுரா, பாகல்கோட்டை, யாதகிரி, ரெய்ச்சூர், கொப்பால் ஆகிய மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக விஜயபுரா விமான நிலைய கட்டுமான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜயபுரா விமான நிலையத்தை தொடங்குவதற்கான பணிகள் நடந்துவருகின்றன’ என்று அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
The post சொந்தமாக விமான சேவையை தொடங்கும் கர்நாடக அரசு: அமைச்சர் எம்.பி.பாட்டீல் தகவல் appeared first on Dinakaran.