×

17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளனர்; காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க விரைவில் ‘ஆபரேஷன் தாமரை’: முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சை பேச்சு

ஷிவமொக்கா: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜவிற்கு கவர்வதற்கான ’ஆபரேஷன் தாமரை’ கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் துணை முதல்வரும் பாஜ மூத்த தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஷிவமொக்காவில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா, இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமே கிடையாது. 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் ஆட்சி எங்குமே இருக்காது.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சியே இருக்காது. கர்நாடகாவில் அடுத்த ’ஆபரேஷன் தாமரை’ கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். கர்நாடகாவில் உள்ள பாஜ எம்.எல்.ஏக்களில் பாதி பேர் காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிடுவார்கள் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் ஒரு பாஜ எம்.எல்.ஏ கூட காங்கிரஸ் கட்சிக்கு செல்லமாட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுக்கிறேன். முடிந்தால் பாஜவிலிருந்து ஒரு எம்.எல்.ஏவையாவது உங்கள் கட்சிக்கு இழுத்து காட்டுங்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கே அக்கட்சி மீது நம்பிக்கையில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்று 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜவை அணுகியுள்ளனர். இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமே கிடையாது’ என்றார். ஈஸ்வரப்பாவின் பேச்சு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளனர்; காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க விரைவில் ‘ஆபரேஷன் தாமரை’: முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress ,Congress government ,Former minister ,KS Eshwarappa ,Shivamogga ,BJP ,Karnataka ,17 ,
× RELATED பாகெல் ஆட்சிக்கு ஆப்பு வைத்த மகாதேவ் ஆப்: அரசியல் விமர்சகர்கள் கருத்து