×

திருப்பதியில் 12ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்; 18 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தையொட்டி வரும் 12ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. தற்போது 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 18ம்தேதி முதல் 26ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி 12ம்தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடைபெறுகிறது. இதனையொட்டி அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இப்பணி முடிந்ததும் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தன்று தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் பல்வேறு வாகனங்களில் சேவை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான 18ம் தேதி மாலை 6.15 மணிக்கு மீனம் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறும். அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

19ம்தேதி காலை சின்ன சேஷ வாகனம், மதியம் 1 மணி முதல் 3 வரை திருமஞ்சனம் இரவு அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். 20ம்தேதி காலை சிம்ம வாகனத்திலும், அன்று இரவு முத்துபந்தல் வாகனத்திலும், 21ம்தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், அன்று இரவு சர்வபூபால வாகனத்திலும், 22ம்தேதி காலை மோகினி அவதாரம், இரவு கருட சேவையும், 23ம் தேதி காலை தங்க தேர், அனுமந்த வாகனத்திலும், அன்று இரவு கஜ வாகனத்தில் சுவாமி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, 24ம்தேதி காலை சூர்யபிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும், 25ம் தேதி காலை ரத உற்சவம் மற்றும் இரவு குதிரை வாகனத்திலும், 26ம் தேதி பல்லக்கு உற்சவம், 6 மணி முதல் 9 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 81,655 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 38,882 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.84 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

The post திருப்பதியில் 12ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்; 18 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் appeared first on Dinakaran.

Tags : thirupati ,Tirumalai ,Mdhethi Abhavar Thirumanjam ,Thirupati Etemalayan Temple ,Tirupati ,Malayan ,
× RELATED திருப்பதியில் பக்தர்கள் திரண்டனர் அலிபிரியில் படி பூஜை உற்சவம் கோலாகலம்