திருமலை: ஐதராபாத் விமான நிலையத்தில் ₹50 கோடி மதிப்புள்ள ‘கோகைன்’ என்ற போதை பொருள் கடத்திய 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு நேற்று மாலை ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கி வந்தனர். அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த பை உள்ளிட்ட உடமைகளையும் புலனாய்வு அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர்.
அப்போது 4 பெண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த 4 பெண்கள் ெகாண்டு வந்த பைகளை தீவிரமாக சோதனை செய்தனர். இதில் 4 பைகளில் 5 கிலோ கோகைன் என்ற போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ₹50 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கோகைனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில், தென்கிழக்கு ஆசியாவின் லாவோஸ் நகரில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் லாவோஸ் நகரில் இருந்து நேரடியாக ஐதராபாத்துக்கு விமானத்தில் வந்தால் பிடிபட்டு விடுவோம் எனக்கருதி லாவோஸில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று, அங்கிருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து ஐதராபாத் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் ₹50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வந்த 4 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஐதராபாத் விமான நிலையத்தில் ₹50 கோடி ‘கோகைன்’ பறிமுதல்: 4 பெண்கள் கைது appeared first on Dinakaran.