×

கொல்லிமலையில் பலத்த மழை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் விடிய, விடிய பெய்த பலத்த மழையின் காரணமாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா வரும் பயணிகள் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சந்தன பாறை அருவி, சினி பால்ஸ், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, சீக்குப்பாறை காட்சி முனையம் ஆகிய பகுதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த சில வாரங்களாக, கொல்லிமலையில் மழை பெய்யாததால், அருவிகளில் சொற்ப அளவிலான தண்ணீர் கொட்டி வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கொல்லிமலையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கும், சுற்றிப்பார்ப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மழையின் காரணமாக, வனப்பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாசிலா அருவி, நம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மாசிலா அருவியில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் நம் அருவி, சினி பால்ஸ், சந்தன பாறை அருவிகளில் மட்டும் குளித்து விட்டு சென்றனர்.

 

The post கொல்லிமலையில் பலத்த மழை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kollimalai ,Ganga Falls ,Senthamangalam ,Agaya Ganga ,
× RELATED மலைவாழ் மக்கள் விழிப்புணர்வு முகாம்