×

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் அதிபராக முயற்சிக்கிறார் மோடி; அதிமுக தான் பலிகடா ஆகும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் அதிபராக மோடி முயற்சிக்கிறார் என்றும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் அதிமுக தான் பலிகடா ஆகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன் மகன் திருமண விழா சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்று காலை நடந்தது. திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:
கழகம் தான் குடும்பம், கழகம் தான் வாரிசு. இதில் எந்த மாற்றமும் கிடையாது. அதே நேரத்தில் கொள்கை குடும்பமாக இருக்கிறோமா? அது தான் முக்கியம். யார் காலிலும் பாதத்தில் விழுந்து வளர்ந்த குடும்பம் இல்லை. தவழ்ந்து போய் வளர்ந்த குடும்பம் இல்லை இது. லட்சிய குடும்பமாக, ஒரு கொள்கை குடும்பமாக இருக்கிறார்கள் என்றால் இது தான் அண்ணா உருவாக்கிய இயக்கம். ஆனால், இது சில பேருக்கு வயிற்று எரிச்சலாக இருக்கிறது. என்னவெல்லாம் பேசுகிறார்கள். அதற்கு நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அதை பற்றி நான் கவலையும் படவில்லை. அதே நேரத்திலே இன்றைக்கு நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நிலையை நீங்கள் எல்லாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.

எப்படி சட்டமன்ற தேர்தல் நடந்த போது தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்ற உணர்வோடு, நீங்கள் எல்லாம் ஒரு சிறப்பான வெற்றியை திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் ஏற்படுத்தி கொடுத்தீர்களோ, அதே போல இந்தியாவை காப்பாற்றுவதற்கு அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. நான் பல முறை சொல்லியிருக்கிறேன். யார் பிரதமராக வேண்டும். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில்லை. யார் ஆட்சிக்கு வர கூடாது என்பது தான் நமது லட்சியமாக, நோக்கமாக இருக்க வேண்டும். இந்தியா என்று சொன்னாலே இன்றைக்கு நிறைய பேருக்கு பயம் வர தொடங்கி விட்டது. அதில் பிஜேபி கட்சிக்கு அச்சமே ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியா என்ற பெயரை சொல்வதற்கே கூச்சப்படுகிறார்கள், அச்சப்படுகிறார்கள். இந்தியா கூட்டணி அமைத்த பிறகு முதன் முதலில் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலே பிஜேபி ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி பாட்னாவில் ஒரு கூட்டத்தை நடத்தினாரோ, அதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று ஒரு உறுதி எடுத்தோம். அதற்கு பிறகு பெங்களூரில் மீண்டும் கூடி இந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை தேர்ந்தெடுத்து அறிவித்தோம். அதற்கு பிறகு 3வது கூட்டமாக மும்பையில் நடத்தி நமது கூட்டணி எப்படி செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவதற்கு என்னென்ன அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் களத்தில் எப்படி ஈடுபட வேண்டும். பிரசார களத்தில் எப்படி நடத்த வேண்டும் என்பதற்காக அதற்கெல்லாம் ஒரு குழுக்கள் அமைக்கப்பட்டு 3வது கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறோம்.

இதை எல்லாம் பார்த்து அஞ்சி நடுங்கி, இன்றைக்கு பிஜேபி என்ன செய்து இருக்கின்றது என்று சொன்னால், திடீரென்று, பாராளுமன்றத்தை கூட்ட போகிறோம் என்று அறிவித்து இருக்கிறார்கள். பாராளுமன்றத்தை எதற்காக கூட்ட வேண்டும், என்ன அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. ஏனென்றால் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஒரே நாடு ஒரே தேர்தல், அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழு அமைத்து இருக்கிறார்கள். அந்த குழுவுக்கு யார் தலைவர் என்றால் இந்திய நாட்டிற்கு ஜனாதிபதியாக இருந்தவரை போட்டு இருக்கிறார்கள்.

ஜனாதிபதி என்பவர் இந்தியாவிற்கு பொதுவானவர். அவர் பதவியில் இருந்து விலகினாலும் அவர் அரசியலுக்கு வரக்கூடாது. அரசியலுக்கு சம்பந்தப்பட்ட எந்த பிரச்னைக்கும் வருவது நியாயம் கிடையாது. அது தான் மரபு. அவர் ஒரு பொதுவானவராக மாறி விடுகிறார். ஆனால், அதை எல்லாம் இன்றைக்கு கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி, எதை பற்றியும் கவலைப்படாமல் அவர் சொன்னால் கேட்பார்கள் என்பதற்காக அவரை போட்டு, அதற்கு பிறகு சில உறுப்பினர்களை போட்டு இருக்கிறார்கள். அந்த உறுப்பினர்களாவது எல்லா கட்சியிடம் கலந்து பேசி போட்டார்கள் என்றால் அதுவும் கிடையாது.

திமுக நாடாளுமன்றத்தில் 3வது இடத்தில் இருக்கிறது. திமுகவுக்கு பிரநிதிகள் கொடுத்தார்கள் என்றால் கிடையாது. ஆக தலையாட்டி பொம்மையாக இருக்கிறோம் என்பதற்காக சில பேரை கூப்பிட்டு, அவங்க நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சர்வாதிகாரத்தோடு ஒரு கமிட்டியை நியமித்து இருக்கிறார்கள். ஒரு சதித்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாம் எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அதை எதிர்த்தார்கள். இப்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறப்போ அதே அதிமுக அதை ஆதரிக்கிறது. இதை ஆதரிக்கிறார்கள் என்றால் என்ன நினைக்கிறோம் என்றால், ஒரு கோடாரியை எடுத்து ஆட்டு தலையை வெட்டுவார்களே? அதை என்ன சொல்வார்கள். பலிகடா பண்ணுவாங்கள்ள.

அப்படி பலிகடா ஆக போகிறோம் என்று அந்த ஆட்டுக்கு தெரியாது. அதற்கு அதிமுக பலிகடா ஆக போகிறது. இந்த சட்டம் நிறைவேறிவிட்டால் திமுகவுக்கு மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. அரசியல் கட்சி நடத்த முடியாது. ஒன்மேன் ஷோவாகிவிடும். ஒரே நாடு ஒரே அதிபர் என்று அறிவித்து விட்டு போய் விடுவார்கள். ஆக தேர்தலே கிடையாது. ஒரே தேர்தல் தான் வைக்க போறோம் என்கிறார்கள். நான் கேட்கிறேன். கொஞ்சம் நினைத்து பாருங்கள். 2021ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலில் நாம் வெற்றி பெற்று இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் போது ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்த ஆட்சியை கலைத்து விடுவீர்களா? சரி நாம மட்டுமா, பக்கத்தில் இருக்கிற கேரள மாநிலம், மேற்கு வங்கம் அதை எல்லாம் கலைத்து விடுவீர்களா?.

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கர்நாடக தேர்தலில் அங்கு 40 சதவீதம் ஊழல் என்று சிறப்பு பெயர் எடுத்த பிஜேபி படுதோல்வி அடைந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்து இருக்கிறது. அந்த ஆட்சியையும் கலைத்து விடுவீர்களா? அது தான் போகட்டும். ஒரே நேரத்தில் தேர்தலை வைக்கிறீர்கள். அப்படி சட்டமன்றத்துக்கு தேர்தல் வைத்து மெஜாரிட்டி வராமல் போகிறது எதாவது ஒரு மாநிலத்தில், மெஜாரிட்டி இல்லாவிட்டால் ஒரு ஆட்சி அமைக்க முடியாது. அப்ப என்ன பண்ணுவீங்க? அப்படி அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் ஜனாதிபதி ஆட்சியை நடத்த போறீங்களா?. இப்படி ஒரு அசிங்கமான, கேவலமான ஒரு சதித் திட்டத்தை தீட்டி தாம் ஒரு அதிபராக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு முயற்சியை எடுத்து இருக்கிறார்களே தவிர. இந்த நாட்டை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. ஆக. தேர்தல் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று ஒரு காரணத்தை சொல்கிறார்கள்.

தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ இல்லையோ, முதலில் நீங்கள் கொள்ளையடிப்பதை குறையுங்கள். சிஏஜி அறிக்கை என்ன கொடுத்து இருக்கிறது. ஏழரை லட்சம் கோடி நெடுஞ்சாலையில் ரோடு போட்டதில், டோல்கேட் வசூல் இப்படி பல நிலைகளில் கோடி கோடியாக கொள்ளையடித்து, அது ஆதாரங்களோடு சிஏஜியில் வெளிவந்து இருக்கிறது. அதை பற்றி கவலைப்படாமல், அதற்கு இதுவரை பதில் சொல்ல முடியாத பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால் , இப்படிப்பட்ட கொடுமையான ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற இன்றைக்கே தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் அதிபராக முயற்சிக்கிறார் மோடி; அதிமுக தான் பலிகடா ஆகும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Modi ,Baligada ,Chief President of the House ,G.K. Stalin ,Chennai ,Chancellor ,Chief President ,B.C. ,
× RELATED என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம்,...