×

அஞ்செட்டி அருகே வாகன ஓட்டிகளை துரத்திய யானை: வைரலாகும் வீடியோ

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே, சாலையோரம் நின்றிருந்த ஒற்றை யானை, வாகன ஓட்டிகளை துரத்திய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி அருகேயுள்ள காப்புக்காட்டில், கடந்த சில நாட்களாக ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. அவ்வப்போது, இங்கிருந்து வெளியே வரும் இந்த யானை, சாலையோரத்தில் சாவகாசமாக சுற்றித்திரிந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய இந்த யானை, அஞ்செட்டி-குந்துக்கோட்டை செல்லும் சாலையில் நின்று, உணவு தேடி வந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சாலையோரம் ஒற்றை யானை உலா வருவதை கண்டதும், சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு, யானை காப்புக்காட்டிற்குள் செல்வதற்காக காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த சில வாலிபர்கள், ஒற்றை யானையை தங்களது செல்போனில் படம் எடுக்க முயன்றனர். அப்போது, அந்த யானை திடீரென சாலையின் ஒருபுறமாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நோக்கி ஆவேசத்துடன் விரட்ட துவங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், உடனடியாக வாகனங்களை வேகமாக இயக்கி, அங்கிருந்து தப்பி சென்றனர். ஆனால், அவர்களை விடாமல் சிறிது தூரம் துரத்தி வந்த யானை, பின்னர் திரும்பிச் சென்று விட்டது. இருசக்கர வாகன ஓட்டிகளை, யானை விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post அஞ்செட்டி அருகே வாகன ஓட்டிகளை துரத்திய யானை: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Anchetty ,Dhenkanikottai ,Elephant ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...