×

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் நவீன தார் கலவை மூலம் சீரமைப்பு பணி: விரைவுபடுத்த கோரிக்கை

செய்துங்கநல்லூர்: துறைமுக நகரமான தூத்துக்குடியையும், தென்மாவட்டங்களில் முக்கிய சந்திப்பாக திகழும் நெல்லையையும் இணைக்கும் வகையில் தூத்துக்குடி – நெல்லை இடையே 47 கிமீ தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இச்சாலையில் நெல்லையையும், தூத்துக்குடியையும் வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலம் இணைக்கிறது. 2012ம் ஆண்டு இந்த புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்தது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றன. பஸ் போக்குவரத்து, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என பல்வேறு தரப்பினரும் இப்பாலம் வழியாக வாகனங்களில் பயணிக்கின்றனர்.

ஆனால் கட்டப்பட்ட 5 ஆண்டிற்குள் 2017ல் பாலத்தின் நடுவே கான்கிரீட் பெயர்ந்து பெரிய ஓட்டை விழுந்தது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்த பிறகு, ஓட்டையில் கான்கிரீட் கலவை போடப்பட்டு 6 மாதங்களுக்கு பிறகு போக்குவரத்து துவங்கியது. தொடர்ந்து இதுவரை 8 முறை பாலத்தில் ஓட்டை மற்றும் விரிசல் விழுந்துள்ளது. தற்போது நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் 4 வழிச்சாலையில் உள்ள பாலத்தின் வழியாக மட்டும் போக்குவரத்து நடந்து வருகிறது.

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணிகள், ரூ.13 கோடி மதிப்பீட்டில் கடந்தாண்டு தொடங்கியது. முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரும் சாலையில் உள்ள பாலத்தில், ராட்சத இயந்திரம் மூலம் பாலத்தின் மேற்பகுதியில் உள்ள தார்களை அகற்றும் பணி நடந்தது. ஆமை வேகத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணியில், கடந்த சில வாரங்களாக நவீன முறையிலான தார் கலவையை உபயோகப்படுத்தி பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பெயர்த்து எடுக்கப்பட்ட தார் கலவை பகுதியில் புதிதாக தார் கலவை போடப்பட்டு வருகிறது. இந்த பாலத்திலும் ஒரு ஓட்டை இதுவரை மூடப்படாமல் திறந்த நிலையில் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

6 மாத காலத்தில் பாலம் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 25 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கூறுகையில், 180 நாட்களில் பாலம் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓராண்டாகியும் இதுவரை ஒரு பாலத்தில் கூட பணிகள் நிறைவடையவில்லை. 2வது பகுதி பாலத்தை எப்போது சீரமைப்பார்கள் என்று தெரியவில்லை. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை வேண்டும், என்றனர்.

 

The post வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் நவீன தார் கலவை மூலம் சீரமைப்பு பணி: விரைவுபடுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vallanadu Tamiraparani river ,Karinganallur ,Thoothukudi - ,Nellai ,Thoothukudi ,Vallanadu Tamiraparani ,Dinakaran ,
× RELATED கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும்...