×

தேசிய அடையாள அட்டை வழங்க பரிசீலனை நடுக்கடலில் மீனவர்களை பாதுகாக்க ஏர் ஆம்புலன்ஸ் வசதி: ராமேஸ்வரத்தில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீனவர்களை பாதுகாக்க ஏர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை நடந்து வருவதாக ராமேஸ்வரத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா நேற்று காலை ராமேஸ்வரம் வந்தார். ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தவர், ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜெட்டிப்பாலம் படகு கட்டும் தளத்தின் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு சென்றவர் அப்பகுதியில் வாழும் மீனவர்கள், மீன்பிடித் தொழில் குறித்து விபரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து நாட்டுப்படகு, விசைப்படகு சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். ஒன்றிய மீன்வளத்துறை துணை அமைச்சர் எல்.முருகன், ஒன்றிய மீன்வளத்துறை அரசு செயலாளர், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, ‘‘ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அரசு ரூ.38,500 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வு நடத்தப்படும். இலங்கையில் உள்ள படகுகளை விடுவிப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருநாட்டு அதிகாரிகள் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழுவின் மூலம் மீனவர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடுக்கடலில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து மீனவர்களை பாதுகாக்க, மீனவர்களின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர்) வசதி ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். பல்வேறு மாநில கடல் பகுதியில் மீன் பிடித்து கரைக்கு செல்லும் வகையில் தேசிய மீனவர் அடையாள அட்டை மீனவர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்’’ என்றார்.

 

The post தேசிய அடையாள அட்டை வழங்க பரிசீலனை நடுக்கடலில் மீனவர்களை பாதுகாக்க ஏர் ஆம்புலன்ஸ் வசதி: ராமேஸ்வரத்தில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister of State L. Murugan ,Rameswaram ,
× RELATED 3 மாநிலங்களில் பாஜ வெற்றி ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து