உடுமலை:உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையானது மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. மெகா தொட்டி என்றழைக்கப்படும் இந்த அணைக்கு கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. திருமூர்த்தி அணை மூலம் கோவை,திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தில் சர்க்கார்பதி மின் நிலையத்திலிருந்து தொடங்கி திருமூர்த்தி அணை வரை 49 கி.மீ தொலைவிற்கு அமைக்கப்பட்ட கான்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் முதுகெலும்பாக திகழும் காண்டூர் கால்வாய் பெரும் பகுதி வனப்பகுதியில் அமைந்திருப்பதால் மழைகாலங்களில் ஏற்படும் மண் மற்றும் பாறை சரிவுகளால் கால்வாய் சேதமடைந்து நீர்கசிவு ஏற்பட்டு வந்தது. இதனால் திருமூர்த்தி அணைக்கு முழுமையாக தண்ணீர் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு நீர்விரயம் ஏற்படவே, தமிழக அரசால் ரூ.184 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 கட்டமாக புனரமைப்பு பணிகள் துவங்கின. சமீபத்தில் ரூ.62 கோடியில் கால்வாய் சரகம் 30 கி.மீ முதல் 49 கி.மீ வரை புனரமைப்பு பணி நடந்தது. இதன் பின்னர் ரூ.72 கோடியில் கால்வாயின் இரு பக்கவாட்டு சுவர்கள் மற்றும் படுகையில் கட்டுமானமாக புனரமைக்கும் பணி நடைபெற்றது.
பாசன காலங்கள் முடிவடைந்த பின்னர் கடந்த ஏப்ரல் 27ம் தேதி கான்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு மீண்டும் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. நடப்பாண்டில் கால்வாயின் மூன்று வெவ்வேறு இடங்களில் விடுபட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணி ஆகஸ்ட் மாதம் இறுதியில் நிறைவடைந்தது. இதையடுத்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக கான்டூர் கால்வாயில் கடந்த 1ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் அணையிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்வதற்காக தேக்கி வைக்கப்படும், தூணக்கடவு அணைக்கு வினாடிக்கு 800 முதல் 1000 கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 1ம் தேதி வினாடிக்கு சுமார் 1124 கன அடி தண்ணீர் பரம்பிக்குளம் அணையிலிருந்து தூணக்கடவு அணைக்கு திறக்கப்பட்டது. தூணக்கடவு அணையிலிருந்து, சர்க்கார்பதியிலிருந்து கான்டூர் கால்வாயி் வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமூர்த்தி அணையை தண்ணீர் வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
The post கான்டூர் கால்வாய் வழியே திருமூர்த்தி அணையை தண்ணீர் வந்தடைந்தது: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.