×

மசினகுடி இணைப்பு சாலைகளில் விபத்துகளை தடுக்க கூகுள் மேப்பில் இருந்து சாலைகளை நீக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி: கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்க மசினகுடி இணைப்பு சாலைகள் அனைத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது மட்டுமின்றி கூகுள் மேப்பில் இருந்து இச்சாலையை நீக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்ேதாறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.
பின்னர், ஊட்டி அருகே உள்ள மசினகுடி மற்றும் முதுமலை பகுதிக்கு செல்ல முற்படுகின்றனர். சிலர் இவ்வழித்தடம் வழியாக கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் பெங்களூர் போன்ற பகுதிகளுக்கும் செல்கின்றனர். அப்போது, இந்த மலைப்பாதையில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அதேபோல், விபத்துகளை தடுக்கும் நோக்கில் இச்சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மசினகுடி மற்றும் முதுமலைக்கு செல்லும் முக்கிய வழித்தடமான தலைகுந்தா பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் வெளி மாநில பதிவு கொண்ட வாகனங்களை செல்ல அனுமதிப்பதில்லை. ஆனால், மசினகுடி செல்ல தலைகுந்தா சாலை இன்றி மற்ற 3 இணைப்பு சாலைகள் உள்ளதால், கூகுள் மேப்பை பயன்படுத்திக் கொண்டு சில சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலை பாதையில் செல்ல முற்படுகின்றனர். மேலும், சிலர் கல்லட்டி மற்றும் உல்லத்தி போன்ற பகுதிகளில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள காட்டேஜ்களுக்கு செல்லவும் முற்படுகின்றனர். இதுபோன்று செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்கத் தெரியாமல் வேகமாக இயக்கி விடுகின்றனர். இதனால், வாகனங்கள் விபத்திற்குள்ளாகி உயிரிழப்பும் ஏற்படுகிறது.கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட டெல்லியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இது போன்று மாற்று பாதையில் செல்லும் போது உல்லத்தி பகுதியில் கார் விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பலியானார். 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. எனவே, இவ்வழித்தடங்களில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் மசினகுடி செல்லும் இணைப்பு சாலைகள் அனைத்திலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, வெளி மாநில பதிவு கொண்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது. மேலும், இந்த சாலைகளை கூகுள் மேப்பில் இருந்து நீக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

The post மசினகுடி இணைப்பு சாலைகளில் விபத்துகளை தடுக்க கூகுள் மேப்பில் இருந்து சாலைகளை நீக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Masinagudi ,Kallati ,Google ,
× RELATED உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ..!!