×

அன்னூரில் 2 மாதத்துக்கு முன்பு இறந்தமகன் சாவில் சந்தேகம்; தந்தை புகாரால் பரபரப்பு

அன்னூர், செப்.3: அன்னூரில் 2 மாதத்துக்கு முன்பு இறந்த மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ராமு என்பவர் மகன் முருகன் (38). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்னூர் அருகே இரும்புக்கடை நடத்தி வந்தார். இவர் கோவையை சேர்ந்த கவிதா (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே அன்னூரில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் குடிக்கக்கூடாது என கவிதா தொடர்ந்து முருகனிடம் கூறி வந்துள்ளார். ஆனால் இதனை முருகன் கேட்காததால் அவருடைய பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த இரு மாதத்துக்கு முன் முருகனின் பெற்றோரிடம் உங்கள் மகனுக்கு உடல் நலம் சரியில்லை எனவும், ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் கவிதா தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் முருகன் இறந்துவிட்டதாக அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். திடீரென மகன் இறந்ததால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி முருகனின் தந்தை ராமு அன்னூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் இறந்ததாக தெரிவித்ததும் வயதான எங்களால் கோவைக்கு வர முடியாது. உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டோம்.

அதன்படி எனது மகன் உடலை எங்கள் ஊருக்கு கொண்டு வந்தனர். அப்போது எனது மருமகளும் உடன் வந்தார். அச்சமயம் மருமகளிடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை. தொடர்ந்து மகனின் உடலை அடக்கம் செய்து விட்டோம். மகன் இறந்து 30-வது நாள் நிகழ்ச்சிக்கு மருமகளை வரும்படி கூறி இருந்தோம். அவரும் வந்தார். ஆனால் அவருடன் ஓமியோபதி டாக்டர் ஒருவர் வந்திருந்தார். அந்த டாக்டருக்கும், எனது மருமகளுக்கும் உள்ள பழக்கத்தில்தான் குடும்பத்தில் பிரச்னை இருந்ததாக அக்கம்பக்கத்தினர் மூலம் நான் அறிந்திருந்தேன். எனது மருமகள், அந்த டாக்டரை உடன் அழைத்து வந்திருந்ததால் எனது மகனின் மரணத்தில் எனக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் 2 பேரும் சேர்ந்து எனது மகனை எதுவும் செய்து இருப்பார்களோ என சந்தேகிக்க தோன்றுகிறது. இதனால் எனது மகன் உடலை சட்டப்படி மீண்டும் தோண்டி எடுத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post அன்னூரில் 2 மாதத்துக்கு முன்பு இறந்தமகன் சாவில் சந்தேகம்; தந்தை புகாரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Annur ,Annoor ,Dinakaran ,
× RELATED மருந்து கடை உரிமையாளரிடம் ஆன்லைனில் மோசடி