×

கும்மிடிப்பூண்டி அருகே மீண்டும் பரபரப்பு உடம்பில் எண்ணெய் பூசிய கொள்ளையர்கள் கைவரிசை: 3 தனிப்படை அமைப்பு

கும்மிடிப்பூண்டி, செப். 3: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் நல்லெண்ணெய் தடவிய ஜட்டி திருடர்கள் மீண்டும் தொடர் நகை, பணம் கொள்ளையில் ஈடுபட்டு அட்டகாசம் செய்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் சில மாதங்களாகவே செல்போன் பறிப்பு, வீட்டை உடைத்து கொள்ளை, வட மாநில இளைஞர் தாக்குதல் நடத்தி பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சியில் வசித்து வருபவர் செந்தில்குமார்(40). இவர் சிப்காட் தொழில் பேட்டையில் காற்றாலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார், அவருடைய மனைவி சாரதா(34), மகள் ஜோஷிதா(7), மகன் நித்தின்(6) ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அதிகாலை 2.30 மணிக்கு செந்தில்குமார் வீட்டுக்குள் யாரோ நடந்து செல்வது போல் சத்தம் கேட்டுள்ளது. உடனே, திடீரென கண் விழித்துப் பார்த்தபோது இரண்டு மர்ம நபர்கள் ஜட்டியுடன் பின்பக்க வாசல் வழியாக நடந்து சென்றுள்ளனர். இதனைக் கண்ட செந்தில்குமார் உடனடியாக மர்ம வாலிபர்களில் ஒருவரை பிடித்து அடித்துள்ளார். இதனால், செந்தில்குமார் மற்றும் மர்ம வாலிபர் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உருண்டபடியே சண்டையிட்டுள்ளனர். எனினும் உடலில் எண்ணெய் பூசியிருந்ததால் மர்ம நபர் தப்பிவிட்டார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த இரண்டு சவரன் நகை, ₹20 ஆயிரம் பணம், ஒரு ஆண்ட்ராய்ட் மொபைலை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. பின்னர், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருட்டு பகுதியில் சென்று தேடினர். ஆனால், கொள்ளையர்கள் ஏற்கெனவே தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கூறியதாவது: இரண்டு வாலிபர்கள் உடம்பில் நல்லெண்ணெய் பூசிக்கொண்டு ஜட்டி மட்டும் அணிந்து இருந்ததாகவும் அவர்களுடன் சண்டையிட்டும் அவர்களை பிடிக்க முடியாமல் போனது என கூறினார். மேலும் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், அதே பகுதியில் வசித்து வரும் முதியவர் ஜெயச்சந்திரன்(72) என்பவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். அதே நள்ளிரவில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு தனியறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பிய பிறகு தான் திருடுபோன பொருட்களின் விவரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்கள் தொடர்பான சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார தீவிரமாக விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

போதிய காவலர்கள் இல்லை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 4 தினங்களுக்கு முன்பு எளாவூர் துராப்பள்ளம் பகுதியில் இதேபோன்று ஜட்டி திருடர்கள் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடித்துள்ளனர். இதனை ஆரம்பாக்கம் போலீசார் மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் கும்மிடிப்பூண்டி சப் டிவிஷன் காவல் நிலையங்களில் போதிய காவலர்கள் இல்லாதததே இது போன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்தேறி வருவதற்கு காரணம் எனவும், உடனடியாக ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் அதற்கான காவலர்களை பணியமர்த்த வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே மீண்டும் பரபரப்பு உடம்பில் எண்ணெய் பூசிய கொள்ளையர்கள் கைவரிசை: 3 தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...