×

க.பரமத்தி பகுதியில்மானாவாரி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

க.பரமத்தி,செப்.3: க.பரமத்தி ஒன்றிய பகுதியில் பருவமழையை நம்பி மானாவாரி விவசாயிகள் விதைப்பு பணிகளை மும்முரமாக செயல்படுத்தி வருகின்றனர்.க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம், நஞ்சைகாளகுறிச்சி, புன்னம், ராஜபுரம், சூடாமணி, தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, தொக்குப்பட்டி, துக்காச்சி, தும்பிவாடி, விஸ்வநாதபுரி, ஆகிய 30ஊராட்சிகள் உள்ளன. அனைத்து கிராம பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் ஆடிப்பட்டம் தேடி விதைத்து அமோகமாக விளைச்சல் செய்து லாபம் கண்டனர். தற்போது, அந்த நிலைமாறி வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையில் விவசாய இழப்பீடுகள் குறித்த அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருப்பதுமே வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் இந்தாண்டு பருவமழையால் கடந்த இரு தினங்களாக பெய்த மழையை நம்பி க.பரமத்தி ஒன்றிய பகுதியில் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர். பொதுவாக விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தால் ஆடிப்பட்டம் மாறிப்போய், ஆவணிப்பட்டமும் போதிய மழை இல்லாததால் ஆட்டம் கண்டுள்ளது. ஏனெனில் விவசாயத்திற்கு தேவையான பருவமழை எப்போதும் ஆடியிலேயே பெய்தால் விதைப்பு பணிகளை துவங்குவார்களாம்.
தற்போது இன்னும் 14நாள்களில் புரட்டாசி பட்டத்தை எதிர்பார்த்து இருக்கையில் தற்போது கடந்த சில நாட்களாக மாலை வேளையில் பெய்த மழையை நம்பி ஒரு சிலர் விவசாயத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை துவங்கி செய்து வருகின்றனர்.

ஏற்கனவே அறுவடை செய்த பின்னர் காய்ந்து போன நிலத்தை விவசாயத்திற்கு பயன் படும் அளவில் பதப்படுத்தும் வேலைகளை சிலர் செய்து வருகின்றனர். ஒரு சிலர் கால்நடைகளுக்காக சோளம், கம்பு போன்ற பயிர்களுக்காக விதைப்பு செய்து அவற்றை டிராக்டரை கொண்டு உழவு பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். மொத்தத்தில் பருவமழையை நம்பி க.பரமத்தி ஒன்றிய பகுதி விவசாயிகள் நிலத்தை பதப்படுத்தும் பணிகளை துவக்கி மும்முரமாக செய்து வருகின்றனர்.

The post க.பரமத்தி பகுதியில்மானாவாரி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Paramathi ,K. Paramathi ,K. Paramathi union ,Dampalayam ,Dinakaran ,
× RELATED கரூர் -கொடுமுடி நெடுஞ்சாலை சத்திரம்...