நாசரேத், செப். 3: குரும்பூர் பஜாரில் விபத்தை தவிர்த்திட பேரி கார்டு அமைக்கப்படுமா? என பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்பார்க்கின்றனர். நெல்லை- திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ளது குரும்பூர். இங்குள்ள பஜாரில் கடைகள், வங்கிகள், பள்ளிகள் நிறைந்து காணப்படுவதோடு எப்போதும் போக்குவரத்துக்கு பஞ்சமிருக்காது. இதன் வழியாக அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதேபோல் இருசக்கர வாகனஓட்டிகளும் மின்னல் வேகத்தில் பயணிக்கின்றனர். இவ்வாறு போக்குவரத்து நெரிசல்மிக்க இச்சாலையை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தனித்துவமிக்க இந்த குரும்பூர் பஜாரில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, இதை தடுக்க பேரி கார்டு அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் ரஞ்சன் கூறுகையில் ‘‘குரும்பூர் பஜாரில் பேரி கார்டு இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. குறிப்பாக பஜாரில் இருந்து ஏரல், நாசரேத் செல்லும் வளைவில் நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பேரி கார்டு இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். விபத்தை தவிர்க்கும் விதமாக அப்பகுதியில் பேரி கார்டு அமைக்க வேண்டும்’’ என்றார். எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டு விபத்தை தவிர்க்கும் விதமாக குரும்பூர் பஜாரில் ஏரல், நாசரேத் வளைவு பகுதி மெயின் ரோட்டில் பேரி கார்டு அமைக்க வேண்டும் என அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விபத்தை தவிர்க்க குரும்பூர் பஜாரில் பேரி கார்டு அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.