×
Saravana Stores

களக்காடு, முக்கூடலில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

களக்காடு, செப்.3: களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு பஞ்சாயத்துக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்திற்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சுப்பிரமணியபுரத்திற்கு குடிநீர் சப்ளை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். இதுபற்றி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே குடிநீர் வழங்க கோரி, நேற்று பெண்கள் காலிகுடங்களுடன் திரண்டு சுப்பிரமணியபுரத்தில் களக்காடு-நாங்குநேரி பிரதான சாலையில் திடீர் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்து வந்த களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். களக்காடு நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் ஏ.ஜி சபை அருகே, படலையார்குளம் உள்பட பல்வேறு இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலையில் உடைப்பை அடைக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்கை கடைபிடித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பாப்பாக்குடி: சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து முக்கூடலில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கூடல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 2 மற்றும் 3 வார்டில் சிங்கம்பாறை பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முக்கூடல் தாமிரபரணி ஆற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக குறுகிய நேரம் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து சிங்கம்பாறையில் பொதுமக்கள் சீரான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது குடிநீர் சீராக வியோகம் செய்யாவிட்டால் மறியலில் ஈடுபட போவதாக பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

The post களக்காடு, முக்கூடலில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kalakadu, Mukodal ,Kalakadu ,Subramaniapuram ,Kadamboduhaiva Panchayat ,Thamirabarani ,
× RELATED களக்காடு அருகே விளைநிலங்களுக்குள்...