×

624 குழந்தைகளுக்கு ₹1.56 கோடி டெபாசிட்

கிருஷ்ணகிரி, செப்.3: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2022-23ம் நிதியாண்டில் 624 பெண் குழந்தைகளுக்கு தலா ₹25 ஆயிரம் வீதம் ₹1.56 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து, உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரிக்கவும், குழந்தை திருமணம் தடுப்பதற்காகவும், முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2022-23ம் நிதியாண்டில் 624 பெண் குழந்தைகளுக்கு தலா ₹25 ஆயிரம் வீதம், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் ₹1 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த 624 குழந்தைகளுக்கும், தலா ₹25 ஆயிரம் மதிப்புள்ள வைப்புத்தொகை ரசீதுகள், பயனாளிகளுக்கு வழங்கப்படும். 2023-23ம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை, 250 பெண் குழந்தைகளுக்கு ₹62 லட்சத்து 75 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 18 வயது நிறைவுற்று முதிர்வுத் தொகை கோரி வரப்பெற்ற பயனாளிகளுக்கு, 2022-23ம் நிதியாண்டில் சுமார் 1200 பேருக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து பெற்று, பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாகவும், காசோலையாகவும் வழங்கப்பட்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டில், முதிர்வு தொகை கோரிய பயனாளிகளில் சுமார் 820 பேருக்கு, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து பெற்று, பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 300 பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை கோரி நிலுவையில் உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட சமூகநல அலுவலக களப்பணியாளர்கள் மூலம், இத்திட்டம் தொடர்பாக புதிய பயனாளிகளை கண்டறியவும், பயனாளிகளுக்கு முதிர்வு தொகை பெற்று வழங்கவும், இத்திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், ஒவ்வொரு மாதமும் 2வது செவ்வாய் கிழமையன்று சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனடைந்த காவேரிப்பட்டணம் ஒன்றியம், ஜெகதாப் ஊராட்சி, கெட்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மனைவி சங்கீதா கூறுகையில், ‘என் கணவர் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்னர். எங்கள் குழந்தைகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ₹25 ஆயிரம் வீதம் நிலையான டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. டெபாசிட் ரசீது நகல் எங்களுக்கு வழங்கி உள்ளனர். இந்த உதவித்தொகை, எங்கள் குழந்தைகள் உயர் கல்வி பயில உதவியாக இருக்கும். எங்களைப் போன்ற 2 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள ஏழை குடும்பங்களுக்கு, இந்த திட்டம் பேருதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்,’ என்றார்.

The post 624 குழந்தைகளுக்கு ₹1.56 கோடி டெபாசிட் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே...