
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தாலுகா தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கு தேவையான சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பதிலும், மருத்துவ சேவைகளை விரிவு படுத்துவதிலும் தாலுகா தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்வேண்டும். மின்-மருத்துவ உபகரணங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பைச் சரிபார்த்து, அவை நல்ல நிலையில் இருத்தல், கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களின்படி, மருத்துவ கழிவுகளை சரியான முறையில் அகற்றுதலை ஆய்வு செய்வதுடன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் இருப்பை மதிப்பீடு செய்து, தரமான சேவையை வழங்குவதற்கு போதுமான மருத்துவப் பணிகள் பணிபுரிதலை கண்காணிக்க வேண்டும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாட்டை உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சுகாதார அமைப்பின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும், இந்த தரநிலைகளை நிலைநிறுத்துவதன் மூலம், பொதுமக்களுக்கு தேவையான நல்வாழ்வு மற்றும் சுகாதார சேவைகளின் முன்னேற்றத்திற்கான அரசின் அர்ப்பணிப்புமிக்க பணியை நிரூபிக்க சரியான தருணமாகும் வகையில் ஆய்வுகளின் அறிக்கைகள் மற்றும் விரிவான விளக்கங்களை உடனடியாக செயலாளர் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
The post தாலுகா தலைமை மருத்துவமனைகள், துணை மருத்துவமனைகளில் கலெக்டர்கள் ஆய்வு நடத்த வேண்டும்: தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவு appeared first on Dinakaran.