×

நிலவிலிருந்து சூரியனுக்கு

இந்திய தேசத்திற்கு மகுடம் சூட்டும் இஸ்ரோவின் கனவுத்திட்டங்களில் ஒன்றான சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் கடந்த மாதம் 23ம்தேதி, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி சரித்திரம் படைத்தது. உலக நாடுகளை உற்றுநோக்க வைத்த இந்த நிகழ்வின் பெரும்மகிழ்வு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிலவைத் தொட்ட இந்தியாவின் வெற்றிமிகு விண்வெளிப்பயணம் அடுத்து சூரியனை சுற்றிச்சுழன்று ஆய்வுசெய்ய ஆயத்தமாகி உள்ளது. இதற்காக ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இதுவரை விண்கலன்களை செலுத்தியுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் விண்ணைத்தொடும் வெற்றி, பெருமை மிகு இந்தியாவையும் இந்தபட்டியலில் சேர்க்கும். அடுத்து வரும் 125 நாட்களில் இந்த இலக்கு நமது வசமாகும். வியத்தகு இந்த விண்கலப்பயணம் நமது தனித்துவத்தோடு பூமிக்கான பாதுகாப்புக்கும் வழிவகுக்கும். ஆதித்யா எல்-1 விண்கலம்விண்வெளியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள ‘லக்ராஞ்சியான் புள்ளி-1’ என்னும் இடத்தில்தான் நிலை நிறுத்தப்படுகிறது. பூமிக்கும் ஈர்ப்புவிசை இருக்கிறது.

சூரியனுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள நேர்கோட்டில் ஏதாவது ஒரு புள்ளியில் இரண்டின் ஈர்ப்பும் சமமாக இருக்கும். அந்த ஈர்ப்புவிசை புள்ளிதான் லக்ராஞ்சியான் புள்ளி எல்-1. பூமியிலிருந்து சுமார் 15லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சூரியனை நோக்கி இந்தப்புள்ளி அமைந்துள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு 1,510.7லட்சம் கிலோ மீட்டர். இதில் நூறில் ஒரு பங்கு தொலைவில்தான் ஆதித்யா எல்-1 விண்கலம் நிறுத்தப்படுகிறது.

சூரியன்-பூமி என்ற இரண்டின் ஈர்ப்பு விசையில் சமமாக இழுபட்டு நிற்பதால் பூமியோடு சேர்ந்து இந்தபுள்ளியில் உள்ள விண்கலம், சூரியனை சுற்றிவரும். இதனால் ஒவ்வொரு கணமும் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே இந்த விண்கலம் நிலைநிற்கும். சூரியப்புயல் அல்லது சூரியச்சூறாவளி ஏற்படும் போது முதலில் இந்த விண்கலத்தை தாக்கும். சூரிய சூறாவளியானது சில நேரங்களில் காந்தப்புயலையும் உருவாக்கும். இந்தபுயல் பூமியை சுற்றியுள்ள அயனி மண்டலத்தை ஆட்டம் காண வைக்கும். சிற்றலை ரேடியோ தொடர்பில் பாதிப்பு, ஜிபிஎஸ் தரும் தகவலில் துல்லியம் சார்ந்த பிழை என்று சில அபயங்களையும் ஏற்படுத்தும்.

இந்த விண்கலம் அதனை உணர்ந்து காந்தப்புயல் குறித்த முன்னெச்சரிக்கையை நமக்கு தரும். இதனால் நாம் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தவகையில் இந்திய தேசத்தின் வியத்தகு விஞ்ஞான சாதனைகள் மதம், மொழி, இனம் கடந்து அறிவை மட்டுமே ஆதாரமாக கொண்டு உச்சம் தொட்டு வருகிறது. அதேநேரத்தில் நமது மண்ணின் மைந்தர்களின் பங்களிப்பும், பெரும் பொறுப்பும் அதில் நிறைந்திருப்பது நமக்கான தனிப்பெருமை. சமீபத்தில் சரித்திரம் படைத்த சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் இறக்கிய திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் நமது தமிழ் நிலத்தை சேர்ந்த விழுப்புரம் வீரமுத்துவேல். இப்போது ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவியுள்ள திட்டத்தின் இயக்குநரும் தித்திக்கும் தென்காசியின் செங்கோட்டை தமிழ்மகள் நிகார்ஷாஜி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post நிலவிலிருந்து சூரியனுக்கு appeared first on Dinakaran.

Tags : Vikram Lander ,Isra ,23Mtedi ,Moon ,
× RELATED சென்னை மாநகராட்சிப் பள்ளியில்...