×

கே.எஸ்.அழகிரி தலைமையில் எம்.பி. தேர்தலை சந்திப்போம்: தினேஷ் குண்டுராவ் பேச்சால் பிரச்னைக்கு தீர்வு

சென்னை: ‘தலைவர் மாற்றம்’ என்ற பேச்சுக்கு இடையில், கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேச்சால், பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி 5 ஆண்டுகளாக உள்ளார். வழக்கமாக 3 ஆண்டுக்கு ஒருமுறை தலைவர் மாற்றப்படுவது வழக்கம். காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பலர் தலைவர் பதவி கேட்டு வருவதால் அவர்கள் கட்சி மேலிடத்தில் அழகிரியை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது ‘தலைவர் மாற்றம்’ என்ற தகவல்கள் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதற்கான பணிகளை வேகப்படுத்த கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, தலைவர் மாற்றம் என்ற குழப்பம் தமிழ்நாடு காங்கிரசில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கட்சி பணிகளை யார் தலைமையில் செய்வது என்ற நீண்ட ஆலோசனையில் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளனர். புதிய தலைவரை அறிவிப்பார்களா, இல்லாவிட்டால் தலைவராக கே.எஸ்.அழகிரியே தொடர்வாரா என்ற விவாதம் தொடர்ந்து காங்கிரசார் மத்தியில் எழுந்து வருகிறது.

எனவே இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் தான் தேர்தல் பணிகளில் கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் இறங்குவார்கள் என்பது மூத்த தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் டெல்லி மேலிடமோ எந்த பதிலையும் சொல்லாமல், இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருவது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொண்டர்கள் மத்தியிலும் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவியது. எதுவாக இருந்தாலும் டெல்லி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், கும்பகோணத்தில் நடந்த காங்கிரஸ் மண்டல மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் கலந்துகொண்டார். அப்போது தலைவர் மாற்றம் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதுகுறித்து, தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்தித்து காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதேபோன்று வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் சந்திப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். தேர்தலை சந்திக்கவும், மிகப்பெரிய வெற்றியை ஈட்டவும் கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும்’’ என்றார்.

இவ்வாறு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியிருப்பதால், தற்போது தலைவர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தெளிவாகிறது என்று காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலிட உத்தரவு இல்லாமல், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் இப்படி கூறியிருக்க முடியாது. எனவே, கே.எஸ்.அழகிரி தலைமையில் கட்சியினர் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து பெரிய அளவிலான வெற்றியை பெற வேண்டும் என்று காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

The post கே.எஸ்.அழகிரி தலைமையில் எம்.பி. தேர்தலை சந்திப்போம்: தினேஷ் குண்டுராவ் பேச்சால் பிரச்னைக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : K.S. Alagiri ,M.P. ,Dinesh Kundurao ,Chennai ,Congress party ,KS Alagiri ,Dinakaran ,
× RELATED கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ்...