×

முருகப்பா தங்ககோப்பை ஹாக்கி: பைனலில் இந்தியன் ரயில்வே – ஹாக்கி கர்நாடகா

சென்னை: எம் சி சி – முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரின் பைனலில் இந்தியன் ரயில்வே – ஹாக்கி கர்நாடகா அணிகள் இன்று மோதுகின்றன. எழும்பூர் ஹாக்கி அரங்கில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் இந்தியன் ரயில்வே – பஞ்சாப் தேசிய வங்கி அணிகள் மோதின. 3வது நிமிடத்திலேயே ரயில்வே அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பிரதாப் லக்ரா கோலாக மாற்றி அசத்தினார். அடுத்து 6வது நிமிடத்தில் அனுராக் குஜுர் ஃபீல்டு கோல் அடிக்க, ரயில்வே அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய பிஎன்பி அணிக்கு, 17வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சஞ்சய் கோலாக மாற்றினார். இடைவேளையின்போது ரயில்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து 2வது பாதியில் இரு அணி வீரர்களும் மாறி மாறி எதிரணி கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். ரயில்வே அணியின் மாற்று வீரர் அர்ஜுன் சர்மா 55 வது நிமிடத்தில் அபாரமாக ஃபீல்டு கோல் அடித்து அணியின் முன்னிலையை மேலும் வலுவாக்கினர்.

பரபரப்பான கடைசி நிமிடங்களில் பஞ்சாப் தேசிய வங்கி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சியை தடுக்க முயன்ற ரயில்வே அணி வீரர்கள் தவறிழைத்தனர். இதனால் பஞ்சாப் அணிக்கு பெனால்டி ஷூட் வாய்ப்பை நடுவர் வழங்கினார். அதை சரியாக பயன்படுத்தி 59வது நிமிடத்தில் குர்சிம்ரன் சிங் கோலாக மாற்றினார். அதன் பிறகு கடைசி ஒரு நிமிடத்தில் எந்த அதிசயமும் நிகழாதால் ரயில்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்று இன்று நடைபெறும் பைனலில் விளையாட தகுதி பெற்றது.

2வது அரையிறுதியில் இந்திய ராணுவம் (ரெட்) – ஹாக்கி கர்நாடகா அணிகள் நேற்று மோதின. நிர்ணயிக்கப்பட்ட நேர ஆட்டம் 1 – 1என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததை அடுத்து, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது.
அதில் வெற்றி பெற்ற ஹாக்கி கர்நாடகா அணி பைனலுக்கு முன்னேறியது. இன்று மாலை 6.15க்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே – ஹாக்கி கர்நாடகா அணிகள் மோதுகின்றன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

The post முருகப்பா தங்ககோப்பை ஹாக்கி: பைனலில் இந்தியன் ரயில்வே – ஹாக்கி கர்நாடகா appeared first on Dinakaran.

Tags : Murukappa Gold Cup Hockey ,Indian Railways ,Hockey Karnataka ,Chennai ,MCC ,Dinakaran ,
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்