×

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றில் வோஸ்னியாக்கி

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, டென்மார்க் நட்சத்திரம் கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றார்.
3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியுடன் (28 வயது, 433வது ரேங்க்) மோதிய வோஸ்னியாக்கி (33 வது, 623வது ரேங்க்) 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் 1 மணி, 58 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 3வது சுற்றில் களமிறங்கிய கஜகஸ்தான் வீராங்கனை முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் எலனா ரைபாகினா (24 வயது, 4வது ரேங்க்), 3-6, 7-6 (8-6), 4-6 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டீயாவிடம் (33 வயது, 30வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக் (போலந்து), கோகோ காஃப் (அமெரிக்கா), கரோலினா முச்சோவா (செக் குடியரசு), ஜின்யு வாங் (சீனா), பெலிண்டா பென்சிச் (சுவிஸ்), யெலனா ஓஸ்டபென்கோ (லாத்வியா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் (36வயது, 2வது ரேங்க்) சக வீரர் லாஸ்லோ ஜெரேவுடன் (28 வயது, 38வது ரேங்க்) மோதினார். தரவரிசையில் ஜெரே பின்தங்கியிருப்பதாலும், இதுவரை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 3வது சுற்றை தாண்டாததாலும் அவரை ஜோகோவிச் எளிதாக வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கு மாறாக முதல் 2 செட்டையும் ஜெரே 6-4, 6-4 என கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான ஜோகோவிச், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 2 செட்டையும் 6-1, 6-1 என மிக எளிதாக வசப்படுத்த சமநிலை ஏற்பட்டது. 5வது மற்றும் கடைசி செட்டில் ஜெரே கடுமையாகப் போராடினாலும், பதற்றமின்றி விளையாடிய ஜோகோவிச் 4-6, 4-6, 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 45 நிமிடத்துக்கு நீடித்தது. அமெரிக்காவின் பிரான்சிஸ் டியபோ, டாமி பால், டெய்லர் பிரிட்ஸ், பென் ஷெல்டன் ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றில் வோஸ்னியாக்கி appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Wozniacki ,New York ,US Open Grand Slam tennis ,Dinakaran ,
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்