×

அரசு பள்ளியில் இருந்து இஸ்ரோவுக்கு… ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநரான தமிழ்நாட்டை சேர்ந்த நிகர் ஷாஜிக்கு குவியும் பாராட்டுகள்

சென்னை: ஆதித்யா எல்1 திட்ட இயக்குநராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பல முக்கிய பொறுப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். நிலவை ஆய்வு செய்ய அனுப்பட்ட சந்திரயான் 3 திட்டங்களில் தமிழர்களின் பங்களிப்பு அதிகம் இருந்தது. சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான்2 திட்ட இயக்குநராக வனிதா முத்தையாவும் சந்திரயான் 3 திட்ட இயக்குநராக வீரமுத்துவேலுவும் செயல்பட்டனர்.

மேலும் அப்துல் கலாம், சுப்பையா அருணன், சிவன் ஆகியோரும் இஸ்ரோவின் முக்கிய பொறுப்புகளை வகித்து உள்ளனர். தற்போது சூரியனை ஆய்வு செய்ய போகும் ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த நிகர் ஷாஜி பணியாற்றி வருகிறார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி. இவரது இயற்பெயர் நிகர் சுல்தான். கணித பாடத்தில் அதிகம் ஆர்வம் கொண்ட நிகர் ஷாஜி, ஆசிரியர்களின் வீடுகளுக்கு சென்று கணித புத்தகங்களை எடுத்து கணக்கு பயில்வார் என அவரது ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

1978-79 கல்வியாண்டில் செங்கோட்டை திருராமமந்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்தார். பிளஸ் 2 தேர்வில் 1980-1981ம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து 1982 முதல் 1986 வரை இளநிலை பொறியியல் படிப்பை முடித்தார். தொடர்ந்து பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடர்ந்து, பின்னர் இஸ்ரோவில் சேர்ந்தார். தற்போது பெங்களூருவில் குடியேறியுள்ள நிஜர் ஷாஜி, பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார். அரசு பள்ளியில் படித்த பெண் உலகமே உற்று நோக்கும் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநராக பணியாற்றி இருப்பது பலருக்கு ஊக்கமாக அமைந்திருக்கிறது.

The post அரசு பள்ளியில் இருந்து இஸ்ரோவுக்கு… ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநரான தமிழ்நாட்டை சேர்ந்த நிகர் ஷாஜிக்கு குவியும் பாராட்டுகள் appeared first on Dinakaran.

Tags : ISRO… ,Aditya ,Nigar Shaji ,Tamil Nadu ,Chennai ,Aditya L1 ,ISRO ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...