
சென்னை: தமிழ்நாடு வனத்துறையால் நிர்வகிக்கப்படும் வன உயிரியல் பூங்காக்களில் செயல்படுத்தப்படும் செயல் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் வேளச்சேரி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா, சேலம் குரும்பட்டி உயிரியல் பூங்கா மற்றும் திருச்சி உயிரியல் பூங்கா ஆகியவற்றின் தற்போதைய மேம்பாட்டு பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசும்போது, “பூங்காக்களை சுற்றி பார்க்க வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூடுதல் விலங்குகளை காட்சிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிண்டி சிறுவர் பூங்காவில் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், சேலம் உயிரியல் பூங்காவில் ரூ.8 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்றார்.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூடுதல் விலங்குகளை காட்சிப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.