×

நாடாளுமன்ற மக்களவை, சட்டமன்றம், மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்?..

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை, சட்டமன்றம், மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்து ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக்குழுவை அமைத்து ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் தற்போதுள்ள கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை இக்குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் இவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ஆகியவற்றில் தேவைப்படும் திருத்தங்களை ஆய்வு செய்து அது குறித்து இக்குழு பரிந்துரைக்கும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதே இதன் நோக்கம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post நாடாளுமன்ற மக்களவை, சட்டமன்றம், மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்?.. appeared first on Dinakaran.

Tags : Parliamentary Lok Sabha ,Legislative Assembly ,New Delhi ,Union Government ,
× RELATED ஆளுநர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும்...