புதுடெல்லி: வங்கி மோசடி வழக்கில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை கஸ்டடி எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி தனது சேவையை நிறுத்திக்கொண்டது. இந்த நிறுவனத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள், வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கோரி நெருக்கடி கொடுத்து வந்தன. 119 விமானங்களுடன் செயல்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள், அந்நிறுவனத்தை தீர்ப்பாயம் மூலம் வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டன. அதனை 2021ம் ஆண்டு வாங்கிய ஜலான் கல்ராக் நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் இயக்குவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வங்கி ஒன்று 848.86 கோடி கடன் கொடுத்திருந்தது. அதில் 538.62 கோடியை அந்த நிறுவனம் திரும்ப செலுத்தாமல் இருந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் சிபிஐ-யிடம் புகார் செய்திருந்தது. அதன் அடிப்படையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரின் மனைவி அனிதா மற்றும் கம்பெனி இயக்குனர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. வங்கியிலிருந்து கடன் பெற்று மோசடி செய்த வழக்குத் தொடர்பாக நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
மேலும் குறிப்பிட்ட வங்கியில் வாங்கிய கடன் தொகையை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பயன்படுத்தாமல் அந்த நிதியை ஜெட்லைட் நிறுவனத்திற்கு மாற்றி நரேஷ் கோயல் மோசடி செய்துள்ளாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் நேற்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நரேஷ் கோயலை விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர். அவரிடம் அதிகாரிகள் காலையில் இருந்து மும்பையில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு நரேஷ் கோயலை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இன்று நரேஷ் கோயல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் வைத்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post வங்கி மோசடி வழக்கில் நேற்றிரவு கைதான ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கோர்ட்டில் ஆஜர்: கஸ்டடி எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு appeared first on Dinakaran.