×

தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்: தொழிலாளர்கள் பீதி

நீலகிரி: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரங்கோடு தேயிலை தோட்டம் டேன்டீ சரகம்-2 படச்சேரி சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வளர்ப்பு நாய்கள் மற்றும் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டேன்டீ தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருவதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிகாலை நேரங்களில் பந்தலூர், சேரம்பாடி, கூடலூர் உள்ளிட்ட பள்ளிகளுக்கு செல்வதற்கு மாணவர்கள் நடந்து சென்று பேருந்துகளை பிடித்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இதேபோல் மாலை நேரங்களில் தொலைதூரத்தில் இருந்து தங்களது குடியிருப்புகளுக்கு செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் சிறுத்தையால் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்பு உள்ளது. மேலும் தேயிலைத்தோட்டத்தில் பசுந்தேயிலை பறிக்க செல்லும் பெண் தொழிலாளர்கள் காலை நேரத்தில் பணிக்கு செல்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தேயிலை தோட்டத்தில் நடமாடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்: தொழிலாளர்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Serangode Tea Estate ,Cherampadi Forest ,Pandalur ,Nilgiris District ,Dandee Charakam ,2 Padachery ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...