×

ஈரோட்டில் இன்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து தாய், மகன் பலி

ஈரோடு: ஈரோட்டில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று அதிகாலை பி.பெ. அக்ரஹாரத்தில் வீட்டின் மேல்தள சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பி.பெ. அக்ரஹாரம் தர்கா வீதியை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் (45). பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாரம்மா (34). இவர்களுக்கு திருமணமான மகளும், 8ம் வகுப்பு படிக்கும் முகமது அஸ்தக் (13) என்ற மகனும் உள்ளனர். முதல் தளத்தில் மற்றொரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஈரோடு மாநகரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், நேற்று இரவும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், ஜாகீர்உசேன் நேற்று இரவு மழை பெய்ததால், வீட்டிற்கு செல்ல முடியாமல் அவர் வேலை பார்க்கும் பேக்கரியிலேயே இரவு தங்கி விட்டார். சாரம்மா மற்றும் அவரது மகன் முகமது அஸ்தக் மட்டும் வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு பெய்த மழை காரணமாக இன்று அதிகாலை 4 மணி அளவில் ஜாகீர்உசேன் வசிக்கும் வீட்டு மொட்டை மாடியின் சுவர் இடிந்து முதல் தளத்தில் விழுந்தது. அதையடுத்து பாரம் தாங்காமல் முதல் தளத்தின் ஒரு பகுதியின் மேல்புற சுவர் இடிந்து தரை தளத்தில் தூங்கி கொண்டிருந்த சாரம்மா, முகமது அஸ்தக் மீது விழுந்தது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, ஜாகீர்உசேன் வீட்டின் மேல்தள சுவர் இடிந்து விழுந்து, அவரது மனைவி, மகன் இடிபாடுகளில் சிக்கியிருப்பதை பார்த்து, ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், விரைந்து வந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சாரம்மா, முகமது அஸ்தக்கை இறந்த நிலையில் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த ஜாகீர்உசேன், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மனைவி, மகன் உடலை பார்த்து கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. மேலும், முதல் தளத்தில் ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்ததால், அந்த வீட்டில் வசித்த மற்றொரு தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஈரோட்டில் இன்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து தாய், மகன் பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,B.P. ,House ,Agraharam ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு