×

நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டியது எனது தலையாய பொறுப்பு: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

பல்லெகலே: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பல்லெகலேவில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் 3வது லீக்கில் இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன. இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது வலை பயிற்சியில் ஷாகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் எல்லாம் கிடையாது. எங்களிடம் எந்த பவுலர்கள் இருக்கிறார்களோ அவர்கள் மூலம் வலை பயிற்சியில் ஈடுபடுகிறோம். அப்ரிடி, நசீம், ரவுப் தரமான பந்துவீச்சாளர்கள் என்பதில் சந்தேகமில்லை. 3 பேரும் அபாரமாக பந்துவீசுகிறார்கள். அதே நேரத்தில் நாங்களும் பல ஆண்டுகளாக நன்றாக விளையாடி வருகிறோம். எனவே அவர்கள் எந்த மாதிரி, எப்படி பந்து வீசுவார்கள் என்பது ஓரளவு தெரியும். அவர்களை எதிர்கொள்ள எங்களது அனுபவத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது சில வீரர்களின் உடல்தகுதியை சோதிப்பதற்கான போட்டி அல்ல. உடல்தகுதி சோதனை பெங்களூருவில் நடந்து முடிந்துவிட்டது. இது 6 ஆசிய அணிகள் இடையிலான தொடர். எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய போட்டி. ஒரு அணியாக என்ன சாதிக்கப்போகிறோம் என்பதை பார்க்க வேண்டும். எங்களுடைய ஆறு பந்துவீச்சாளர்களும் சிறந்த பந்துவீச்சாளர்கள். பும்ரா அயர்லாந்தில் சிறப்பாக இருந்தார். தற்போதைய பயிற்சி முகாமிலும் சிறப்பாக இருந்தார். எங்களது பிரதான மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இது எங்களுக்கு மிக மிக நல்ல அறிகுறி. போட்டி குறித்து மக்கள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் எதிரணிக்கு எதிராக எப்படி சிறப்பாக செயல்படுவது என்று மட்டும்தான் பார்க்க முடியும்.

எங்களுக்கு உதவப் போவது எதுவென்றால் நாங்கள் களத்தில் செய்கின்ற சரியான விஷயங்கள்தான். அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டியது தான் எனது தலையாய பொறுப்பு. உலகக் கோப்பை தொடருக்கு முன்பு சில விஷயங்களை நாங்கள் சரி செய்ய உள்ளோம். அந்தப் பணியை ஆசிய கோப்பை தொடரில் நிச்சயம் செய்வோம். பாகிஸ்தான் சமீப காலங்களில் டி.20 மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் நன்றாக விளையாடியது. நம்பர் 1 ஆக இருக்க அவர்கள் மிகவும் கடினமாக உழைத்தனர். அது நாளை (இன்று) எங்களுக்கு ஒரு நல்ல சவாலாக இருக்கும், என்றார்.

The post நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டியது எனது தலையாய பொறுப்பு: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,Pallekale ,16th Asia Cup ,India ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…