×

சிங்கப்பூரின் 9வது அதிபராக தருமன் சண்முகரத்னம் தேர்வானது அம்மக்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தருமன் சண்முகரத்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் அதிபராக இருக்கும் ஹலிமா யாக்கோபின் 6 ஆண்டு கால பதவி காலம் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைவதால் அங்கு நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான பிரசாரம் வரும் 30ம் தேதியுடன் முடிந்தது. இந்த போட்டியில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தருமன் சண்முகரத்தினம், எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 64 வயதான தமிழரான தருமன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

சிங்கப்பூரின் 9வது அதிபராக தருமன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தருமன் சண்முகரத்னம் கடந்த 2001ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோ தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ள அவர், கடந்த 2011,2019ம் ஆண்டுகளில் துணை பிரதமராக பதவி வகித்தார். மேலும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் தருமன் பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தருமன் சண்முகரத்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தருமன் சண்முகரத்னத்திற்கு எனது வாழ்த்துக்கள்.தருமனின் ஈர்க்கக்கூடிய தகுதிகள், தமிழ் பாரம்பரியம் எங்களை பெருமைப்படுத்துகிறது.சிங்கப்பூர் அதிபராக தருமன் சண்முகரத்னம் தேர்வானது அம்மக்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது,”எனத் தெரிவித்துள்ளார்.

The post சிங்கப்பூரின் 9வது அதிபராக தருமன் சண்முகரத்னம் தேர்வானது அம்மக்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tharuman Shanmukharatnam ,9th President of Singapore ,Chief Minister ,Mukheratnam ,D.C. ,G.K. ,Stalin ,Chennai ,Tharuman Salmukharatnam ,Singapore ,MC. G.K. Stalin ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...