சென்னை, செப்.2: சென்னை சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கேட்பாரற்ற வாகனங்களை பறிமுதல் ெசய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை, மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்களை மாநகராட்சி சார்பில் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், எழும்பூர், டாக்டர் நாயர் சேவை சாலையில் 5 வாகனங்களும், அண்ணாநகர் மண்டலம், நியூ ஆவடி சாலையில் 3 வாகனங்கள் என மொத்தம் 8 வாகனங்கள் காவல்துறை உதவியுடன் நேற்று அப்புறப்படுத்தப்பட்டது. எழும்பூர், டாக்டர் நாயர் சேவை சாலையில் காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியினை மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், இதுகுறித்து மேயர் பிரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் 1,308 வாகனங்கள் கண்டறிப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த வாகனங்களை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் காவல்துறை உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது எழும்பூர், வார்டு-61க்குட்பட்ட பகுதிகளில் 5 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அப்புறப்படுத்தப்படும் வாகனங்கள் பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் வைக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஏலம் விடப்படும். இவ்வாறு கைவிடப்பட்ட வாகனங்கள் சாலை மற்றும் தெருக்களில் நெடுங்காலமாக நிறுத்தி வைக்கப்படுவதனால், குப்பைகள் சேகரமாகும். மேலும், மழை பெய்தால் அவ்விடத்தில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும். மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும். இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் சார்பில் அப்புறப்படுத்தப்பட்ட வாகனங்களை உரிமை கோரி வரும் உரிமையாளர்கள் சரியான ஆவணங்களை காண்பிக்கும்பட்சத்தில் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையிலும் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அகற்றிடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) மகேசன் மற்றும் காவல்துறை, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கேட்பாரற்ற வாகனங்களை பறிமுதல் ெசய்யும் பணி தீவிரம்: மேயர் பிரியா நேரில் ஆய்வு appeared first on Dinakaran.
