
திருவள்ளூர், செப். 2: திருவள்ளூர் உழவர் சந்தை கடந்த 2000ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் 40 கடைகளுடன் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு. காய்கறிகள் மற்றும் பல்வேறு பூக்களின் கொள்முதல் மற்றும் விற்பனையில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆதாரமாக விளங்கி வந்தது. இந்நிலையில், தற்போது ₹44.31 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் வசதி மேம்படுத்தப்பட்டு, 22 புனரமைக்கப்பட்ட கடைகளுடன் 6 புதிய கடைகள் மற்றும் தினசரி விலையினை நுகர்வோர் அறியும் வகையில் காணொளி வாயிலாக விலை விளம்பர பலகை ஆகிய புதிய அம்சங்களுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நேரடி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த திறப்பு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்றுமுன்தினம் தலைமை தாங்கினார். கே.ஜெயக்குமார் எம்பி , எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) ராஜேஸ்வரி, வேளாண்மை அலுவலர் முபாரக், உதவி வேளாண்மை அலுவலர் இலக்கிய பாரதி ஆகியோர் வரவேற்றனர். இந்த விழாவில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட திருவள்ளூர் உழவர் சந்தையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: இந்த உழவர் சந்தையில் காலை, மாலை நேரங்களில் காய்கறி, கனி, பூக்கள் மட்டுமின்றி வீட்டுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்பட உள்ளது. இங்கு உழவர்களுக்கு வாடகை இல்லாத கடை மற்றும் தராசு வசதி. அது மட்டுமல்லாமல் உழவர்களிடம் பொதுமக்கள் நேரடியாக வியாபாரம் செய்யும் வாய்ப்பு. சரியான எடை, சரியான விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். மேலும், கூட்டுறவு துறை மூலமாக பல்பொருள் கூட்டுறவு சிறப்பங்காடி, மகளிர் சுய உதவி குழு மூலமாக சிற்றுண்டி ஆகியவையும் விற்பனை செய்யப்பட உள்ளது என பேசினார்.
The post திருவள்ளூரில் ₹44.31 லட்சத்தில் உழவர் சந்தை புனரமைப்பு: அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.