×

கடன் பெற்று தருவதாக கூறி அழைத்து சென்று திமுக உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க முயற்சி: எஸ்பியிடம் திமுகவினர் புகார்

செங்கல்பட்டு செப்.2: கடன் பெற்று தருவதாக கூறி அழைத்து சென்று, திமுக உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க முயற்சி நடைப்பெற்று வருகின்றது என திமுகவினர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சித்தாமூரில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள், திமுகவில் உள்ள முதியவர்களிடம் விவசாயம், மாடு வாங்குவதற்கு கடன், மகளிர் சுய உதவி குழு கடன் ஆகியவற்றை பெற்று தருவதாக கூறி, முதியோர் மற்றும் திமுக உறுப்பினர்களை அதிமுக ஒன்றிய செயலாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். பின்னர், அவர்களுக்கு சால்வை அணிவித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு நீங்கள் அதிமுகவில் இணைந்து விட்டீர்கள் எனக் கூறி அனுப்பி வருகின்றனர்.

மேலும், அதிமுகவினர் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவு செய்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து வருவதாக கணக்கு காட்டி வருகின்றனர். சித்தாமூர் ஒன்றியத்தில், திமுகவினர் அதிக அளவில் இருப்பதால், அதிமுகவினர் இதுபோல் நாடகங்களை நடத்தி வருகின்றதாக, திமுகவினர் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து சித்தாமூர் பகுதியை சேர்ந்த திமுகவினர் மற்றும் பாதிக்கப்பட்டோர் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத்தை நேரில் சந்தித்து அதிமுகவினர் செய்யும் மோசடியை எடுத்து கூறினர். அதற்கு அவர் உடனடியாக அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது, ஒன்றிய செயலாளர் சிற்றரசு, சித்தாமூர் ஒன்றிய குழு துணை தலைவர் பிரேமாசங்கர், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் நிர்மல்குமார், ஒன்றிய கவுன்சிலர் பாரதி காண்டீபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post கடன் பெற்று தருவதாக கூறி அழைத்து சென்று திமுக உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க முயற்சி: எஸ்பியிடம் திமுகவினர் புகார் appeared first on Dinakaran.

Tags : DMK ,AIADMK ,SP ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி...