தர்மபுரி, செப்.2: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 166 மி.மீ., மழை பெய்தது. கனமழையால் பிடமனேரி பகுதியில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 27ம்தேதி 66.4 மி.மீ, 29ம்தேதி 66.8 மி.மீ, 30ம்தேதி 91.8 மி.மீ மழை பெய்தது. நேற்று முன்தினம் (31ம்தேதி), மாவட்டத்தில் மதியம் முதல் இரவு வரை தொடர்ந்து கனமழை பெய்தது.தர்மபுரி தாலுகாவில் அதிகபட்சமாக 60 மி.மீ மழையும், மாவட்டம் முழுவதும் 166 மி.மீ மழையும் பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி வரும் நிலையில், தர்மபுரி நகராட்சியை ஒட்டி, சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள பிடமனேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக ஏரி நிரம்பி, கோடி வழியாக உபரிநீர் வழிந்தோடுகிறது.
இந்த நீர் செல்லும் பாதையில், ஆங்காங்கே ஆக்கிரமிப்பால் மழைநீர் செல்ல வழியின்றி, ஏரியின் மறுகரையில் உள்ள விவசாய நிலங்கள், 50க்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலைகளுக்குள் புகுந்தது. பிடமனேரி ஏரியை ஒட்டியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் பயிரிட்டு இருந்தனர். ஒரு வாரமாக பெய்த கனமழையால், ஏரியில் இருந்து வெளியேறும் மழைநீர் வாய்க்கால் வழியாக வெளியேற வழியின்றி, விளைநிலங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் 50 ஏக்கரில் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
அதே போல் காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனால் சாலைகள் சேதம் அடைந்தன. காரிமங்கலம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், திண்டல் அருகே உள்ள உச்சம்பட்டி கிராமத்தில் விவசாயிகள் அமைத்திருந்த பசுமை குடில்கள் சேதமடைந்தன.பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த பசுமை குடில்கள் சேதம் அடைந்ததால், அதில் வைக்கப்பட்டிருந்த குடைமிளகாய், தக்காளி செடிகளும் நாசமானது.
இதுகுறித்து விவசாயி வடிவேல் கூறுகையில், ‘’வங்கியில் கடன் வாங்கி ₹40 லட்சம் மதிப்பில் பசுமைக் குடில்கள் அமைத்திருந்தோம்.சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு பசுமை குடில் சரிந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் பசுமை குடில்களுக்கு காப்பீடுதர முடியாது என்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.
இதுகுறித்து பிடமனேரி 1வது கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஒருவாரமாக, தர்மபுரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. பிடமனேரி ஏரி நிரம்பி, தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வயல் வெளியில் மழைநீர் புகுந்துள்ளது. 4 நாட்களுக்கு முன்பு தான், இந்த பகுதியில் நெல் நாற்று நடவு செய்தோம். கனமழை பெய்ததால் சுமார் 50 ஏக்கர் அளவிற்கு நெற்பயிர் மழைநீரால் அழுகி வருகிறது.அடுத்த மழை பெய்தால், அருகில் உள்ள கிராமங்களில் பயிரிட்டுள்ள 150 ஏக்கர் நெற்பயிரும் சேதமடையும். எனவே, உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், பிடமனேரி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி, தண்ணீர் செல்ல வழியை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post 50 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.
