×

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை: மருத்துவத்துறை செயலாளர் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு வெள்ளையங்கி அணிவிக்கும் விழா நேற்று நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டார். அவர், மாணவர்களுக்கு இனிப்பு, ரோஜா பூ மற்றும் வெள்ளையங்கி வழங்கினார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மருத்துவ கல்லூரிகளில் ராக்கிங் நடக்காது. அதை மீறியும் நடந்தால் நிர்வாகம் நிச்சயம் இடைநீக்கம் செய்யும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் குறிப்பாக தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு உதவும் வண்ணம் ஆசிரியரை நியமித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலமாக உள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என புகார் வந்தால் தேர்வு குழு மூலமாக அக்கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மின்னஞ்சல் மூலமாக புகார் அளிக்கலாம். அதன் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 36 மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் கலந்தாய்வு முடிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

The post தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை: மருத்துவத்துறை செயலாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Private Medical Colleges ,Medical Secretary ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...