
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம், மண்டபம் மற்றும் தொண்டி அருகே வழமாவூரில் ஒருங்கிணைந்த கடல்பாசி பூங்கா அமைக்க நடைபெற உள்ள பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேற்று வந்தனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று மாலை மூக்கையூர் துறைமுகத்தில் ஆய்வு பணியும், அதையடுத்து, மீனவ மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து, பெண்கள், குழந்தைகள் என குடும்பங்களுடன் பிற்பகல் 3.30 மணி முதல் காத்திருந்தனர். ஆனால், இரவு சுமார் 8.30 மணிக்கு மேல் ஒன்றிய அமைச்சர்கள் வந்தனர். பின்னர், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி துவக்க உரையாற்றினார்.
அவர் பேசுகையில், ‘‘ஒன்றிய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் அவர்களே’’ என குறிப்பிட்டு உரையைத் துவக்கினார். ஒன்றிய அமைச்சர் என பேசியதைக் கண்டித்து மேடையின் கீழே அமர்ந்திருந்த பாஜவை சேர்த்தவர்கள், நவாஸ்கனி எம்பியை பேசவிடாமல் கூச்சலிட்டனர். இதனால் எம்பி துவக்க உரை பாதியில் நிறுத்தப்பட்டு, அவரிடமிருந்து மைக்கை பறித்து ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா இந்தியில் பேசினார்.
The post ஒன்றிய அமைச்சர்கள் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்பியை பேச விடாமல் பாஜவினர் ரகளை: 5 மணி நேரம் மீனவர்கள் காக்க வைப்பு appeared first on Dinakaran.