×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெ. கார் டிரைவர் கனகராஜ் மர்மசாவு குறித்து விசாரணை: சேலத்தில் சாட்சிகளிடம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி

சேலம்: கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறந்தது தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவராக சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் என்பவர் இருந்துள்ளார். இவரை போலீசார் தேடி வந்த நிலையில் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் விபத்தில் சிக்கி பலியானார்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர், இந்த கொடநாடு கொலைக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். அவர் சொல்லி தான் எனது தம்பி இந்த கொள்ளையில் ஈடுபட்டான். அவரை விசாரிக்க வேண்டும் எனவும், தனது தம்பி விபத்தில் இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் விபத்து என மறைத்து விட்டனர் எனவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கையும் கூலிப்படை தலைவன் கனகராஜ் இறந்த வழக்கையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தற்போது சூடு பிடித்துள்ளது. ஆத்தூரில் கனகராஜ் இறந்த வழக்கை சிபிசிஐடியின் கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆத்தூர், இடைப்பாடி ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று இந்த விபத்து வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் சில சாட்சிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. பின்னர் கூடுதல் எஸ்.பி. முருகவேல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெ. கார் டிரைவர் கனகராஜ் மர்மசாவு குறித்து விசாரணை: சேலத்தில் சாட்சிகளிடம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,J. ,Kanagaraj Marmasau ,CBCID ,Salem ,Kanagaraj ,Koda Nadu ,Dinakaran ,
× RELATED யூடியூபர் VJ சித்துக்கு எதிராக போலீசில் புகார்!