சென்னை: பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குள் செல்போன்கள் மற்றும் கேமரா பொருத்திய கருவிகள் கொண்டு வர விதிக்கபட்ட தடை அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தபடும் என்றும், தடையை மீறுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பழனி தண்டாயுதபாணி கோயில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயிலின் இணை ஆணையர் தரப்பில் கோயில்களுக்கான அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.பரணிதரன் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ‘2022ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குள் செல்போன்கள் மற்றும் கேமரா பொருத்திய கருவிகள் கொண்டு வர விதிக்கபட்ட தடை அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தபடும். தற்போதைக்கு பழனி கோயிலின் மலை அடிவாரத்தில், செல்போன்கள் சேகரிப்பு மையங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கை தொடங்கபட்டுள்ளது. செல்போன்களை பாதுகாப்பதற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோயிலில் சுய உதவி குழுக்கள் மூலம் செல்போன்கள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழனி கோயிலில் விஞ்ச், ரோப் கார் மையங்கள், மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயில் அருகே என 3 இடங்களில் செல்போன்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மலைக் கோயில் அருகே அமைந்துள்ள தண்ணீர் பந்தல் மண்டபம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தவுடன், அது மீட்டெடுக்கப்பட்டால், அந்த மண்டபத்தின் ஒரு பகுதியும் மொபைல் போன்கள் சேகரிப்பு மையமாக பயன்படுத்தப்படும்.
கோயிலுக்குள் மொபைல் போன்கள் கொண்டு செல்லகூடாது என்று ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பக்தர்கள் தங்கும் இடங்களில் விளம்பரப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் பரிசோதிக்கப்படுவார்கள். இதையும் மீறி பக்தர்கள் எவரேனும் கேமரா போன்ற பொருட்களை கொண்டு வந்து புகைப்படம் எடுத்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த நடைமுறைகளை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
The post விதிகளை மீறினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் பழனி கோயிலில் அக்.1 முதல் செல்போன், கேமராவுக்கு தடை: அனைத்து கோயில்களிலும் அமல்படுத்த ஐகோர்ட் அறிவுரை appeared first on Dinakaran.