×

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆட்சியில எதிர்ப்பு.. இப்போ ஆதரவு… பல்டி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் ஆளும் கட்சியாக இருந்தபோது இந்த திட்டத்தை எதிர்த்தது. தற்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் ஆதரவு தெரிவித்து தனது இரட்டை நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் கால விரயம், செலவு தவிர்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 2018ம் ஆண்டு இதேபோன்று ஒன்றிய அரசு, ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்டது. அப்போது, முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆட்சியில் இல்லாதபோது வேறு நிலைப்பாடு என்று தனது இரட்டை நிலையை அதிமுக வெளிப்படுத்தியுள்ளது. கொள்கையில் உறுதியாக நில்லாமல் நேரத்திற்கு ஏற்றார்போல நிறம் மாறுவதுபோல அதிமுகவின் செயல்பாடு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆட்சியில எதிர்ப்பு.. இப்போ ஆதரவு… பல்டி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,General Secretary ,AIADMK ,
× RELATED லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி...