×

திருமணம் செய்த பிறகு 7 முறை கருக்கலைப்பு; ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டுகிறார் திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி முன் நடிகை விஜயலட்சுமி 3 மணிநேரம் வாக்குமூலம்: வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்களுடன் போலீசார் தீவிர ஆலோசனை

சென்னை: தன்னை திருமணம் செய்த பிறகு 7 முறை கருக்கலைப்பு செய்துவிட்டு, தற்போது அவரது கட்சியினர் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி சீமான் மிரட்டி வருகிறார் என திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராகி 3 மணி நேரம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். தமிழ் சினிமாவில் பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சீமான் இயக்கத்தில் ‘வாழ்த்துகள்’ என்ற திரைப்படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்தார். இதனால் இயக்குநர் சீமானுக்கும் விஜயலட்சுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தால் சீமான் தன்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தோம். அதன் காரணமாக, சீமானால் 7 முறை கருவுற்றேன். பிறகு சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் விஜயலட்சுமி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகாரின்படி, வளசரவாக்கம் போலீசார் அப்போதே சீமான் மீது ஐபிசி 417, 420, 354, 376, 506(1) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், அப்போது அதிமுக ஆட்சி என்பதால் சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக பலகட்ட சட்ட போராட்டங்கள் நடத்தினார். அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை. ஒரு கட்டத்தில் விஜயலட்சுமி அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பிறகு அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த போது விஜயலட்சுமியிடம் தற்கொலை குறித்து மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அப்போதும் அதிமுக ஆட்சி என்பதால் திருவான்மியூர் போலீசார் சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

நிலைமை கைமீறி செல்வதால், விஜயலட்சுமியிடம் தனது கட்சியின் முக்கிய நிர்வாகியான மதுரை செல்வம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி மாதம் ரூ.50 ஆயிரம் தருவதாகவும், விஜயலட்சுமியை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்து வாழ்க்கை நடத்துவதாக சீமான் கூறியதாக சமாதானம் செய்துள்ளார். அதன்படி கடந்த 2023 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீமான் தரப்பு சொன்னபடி மாதம் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளனர். அதற்கு பிறகு பணம் அனுப்பவில்லை.

இதுகுறித்து விஜயலட்சுமி கேட்ட போது, மதுரை செல்வம் மூலம் சீமான் ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டியதாகவும், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 28ம் தேதி சீமான் மீது மீண்டும் புகார் அளித்தார். புகாரின்படி விசாரணை நடத்த ராமாபுரம் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி தற்போது ராமாபுரம் போலீசார் விஜயலட்சுமி அளித்த புகாரின் மீது நேற்று முன்தினம் முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

முதற்கட்டமாக விஜயலட்சுமியை ராமாபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு நேரில் அழைத்து 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர், சீமான் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறியுள்ளார். அதேநேரம், சீமான் மதுரையில் தங்கி இருந்த போது விஜயலட்சுமிக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து வரழைத்த ஆதாரங்கள், பணம், நகைகள் கொடுத்த ஆதாரங்கள், சீமான் தரப்பில் ஒவ்வொரு மாதமும் அளித்த பணத்திற்கான வங்கி கணக்கு ஆதாரங்களை அவர் சமர்ப்பித்தார்.

அதோடு இல்லாமல், சீமானுக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் பணம் அதிகளவில் வந்ததற்கான பல ரகசியங்களையும் விஜயலட்சுமி விசாரணையின் போது வாக்குமூலமாக அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் குற்றம்சாட்டப்பட்ட சீமான், இயக்குநராக இருந்தாலும், அவர் தற்போது தனியாக கட்சி நடத்தி வருகிறார். இதனால் அவர் மீது போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், போலீசார், தங்களிடம் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி முன்பு விஜலட்சுமி நேரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு விஜயலட்சுமி நேற்று மதியம் 1.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி முன்பு அவர், சீமானுடன் எந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது உடனிருந்த நபர்கள் யார் யார்? இருவரும் தங்கி இருந்த மதுரையில் உள்ள 3 நட்சத்திர ஓட்டல் விவரங்கள், சீமானால் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான மருத்துவ ரசீதுகள் என அனைத்து ஆதாரங்களையும் நீதிபதியிடம் அளித்ததாகவும், தன்னை நீதிமன்றத்திற்கு செல்லாதபடி சீமான் பல வழிகளில் தடுத்ததாகவும் அவர் நீதிபதியிடம் குற்றச்சாட்டாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அப்போது கூடுதல் நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய ஆவணங்களுடன் விஜயலட்சுமி பதில் அளித்தாகவும், தற்போது மதுரை செல்வம் மூலம் அனுப்பிய ஆபாச வீடியோவையும் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அதாவது 3 மணி நேரம் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்கு பிறகு விஜயலட்சுமியை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து போலீசார் காரில் அழைத்து சென்றனர்.

சீமானுக்கு எதிராக வலுவான ஆதாரங்களுடன் மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியிடம் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளதால், சீமான் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ராமாபுரம் போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை பிறகு நீதிபதியிடம் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு வரும்போது அங்கு எந்தபிரச்னையும் ஏற்படாமல் இருக்க திருவள்ளூர் மாவட்ட கூடுதல் எஸ்பி விவேகானந்தா சுக்லா மற்றும் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிரபல திரைப்பட இயக்குநரும், அரசியல் கட்சியின் தலைவருமான ஒருவர் மீது, பாலியல் புகார் எழுந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சீமானுக்கு சம்மன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு பிரசாரம் செய்யும்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வருகிற 11ம் தேதி ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நேற்று சீமான் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பூருக்கு சென்றிருந்தார். சம்மனை அவரிடம் வழங்க ஒரு எஸ்ஐ தலைமையிலான 3 போலீசார் காரில் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு சென்றனர். அங்கு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த சீமானிடம் போலீசார் சம்மனை வழங்கினர்.

* ‘விசாரிக்கட்டும்.. நடவடிக்கை எடுக்கட்டும்..’ சீமான் பேட்டி
திருப்பூரில் நிருபர்களை சீமான் சந்தித்தபோது நடிகை நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து கேட்டனர். அதற்கு அவர் ‘‘என் மீதான அக்கறையில் இதை கேட்கிறீர்களா என்பது எனக்கு தெரியவில்லை. உன் மேல் வைக்கிற குற்றச்சாட்டு, விமர்சனம் உண்மை இல்லை என்றால் அதற்கு விளக்கம் சொல்ல தேவையில்லை என்பது எனது கருத்து. ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டு புருஷனோட வாழ்ந்துகொண்டு இருக்கும்போது, நான் சமூகத்திடம் அந்த பெண் என்னை ஏமாற்றிவிட்டு போனது என்று சொன்னால் என்னை நீங்க காரித்துப்ப மாட்டீங்க. அதை ஏன் எல்லாரும் ரசிக்கிறீங்க? எனக்கு குடும்பம் இருக்கிறது. 2 பிள்ளைங்க இருக்கிறார்கள். ஒரு கனவு இருக்கிறது. யார் மனு கொடுத்தாலும் விசாரிக்க வேண்டியது காவல்துறை கடமை. அதை அவர்கள் செய்வார்கள். உண்மையிலேயே நான் குற்றவாளியாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் சொல்றோம். அதற்கு பயப்படுகிற ஆள் இல்லையே நான். என்ன வேறு ஊருக்கு ஓடிப்போயிட்டேனா? தேர்தல் வருவதால் என் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

The post திருமணம் செய்த பிறகு 7 முறை கருக்கலைப்பு; ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டுகிறார் திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி முன் நடிகை விஜயலட்சுமி 3 மணிநேரம் வாக்குமூலம்: வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்களுடன் போலீசார் தீவிர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Vijayalakshmi ,Tiruvallur Women's Court ,Chennai ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!