×

மெரினா கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பணியை தொடங்கியது பிளமிங்கோ மிஷின்

சென்னை: சென்னை மெரினா கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பிளமிங்கோ என பெயர் வைக்கப்பட்ட இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை நேற்று மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தொடங்கி வைத்தார். இந்த இயந்திரம் கலங்கரை விளக்கம், கச்சேரி சாலை, திருமயிலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக சுரங்கம் தோண்டும். வரும் நவம்பர் 2025ல் போட் கிளப் வந்தடையும். ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்து வரும் நிலையில் நான்காவது வழித்தடத்தில் முதல்முறையாக சென்னை மெரினாவில் சுரங்கம் தோண்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் மெரினாவில் பொருத்தப்பட்டு தற்போது சோதனைகளும் நிறைவு பெற்று சுரங்கம் தோண்ட தயாராக உள்ளது. பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை 26.1 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ள வழித்தடம் 4ல் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் இருந்து இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. இவை மேல் மற்றும் கீழ் சுரங்கங்களாக செல்லும். சென்னை கலங்கரை விளக்கம் வரை தோராயமாக இரண்டு பாதைகளையும் சேர்த்து 16 கிலோ மீட்டர் முழுவதும் தோண்டி முடிக்க நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 700 மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த இயந்திரம் பூமிக்கு அடியில் 29 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கனரக இயந்திரம், 6.670 மீ. துளை விட்டம் மற்றும் 110 மீ. நீளமுள்ள பூமி அழுத்த சமநிலை கொண்டது.

இதுகுறித்து மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறியதாவது: மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. இன்னும் ஐந்து நாட்களுக்குப் பிறகு முழுமையான பணிகள் தொடர்ந்து நடைபெறும். இந்த மெட்ரோ பணிக்காக, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசிடம் முழு அனுமதி பெற்று, அந்த பகுதியில் இருந்த காந்தி சிலை மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மெட்ரோ ரயில் நிலையம் 35 மீட்டர் அகலம், 416 மீட்டர் நீளம் கொண்ட மிக பிரமாண்டமாக வர இருக்கிறது. இதுபோன்ற மெட்ரோ ரயில் நிலையம் சென்னையில் இதுவரைக்கும் இல்லை.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை விட இது பெரிதாக அமைய உள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் பணியில் மேல் உள்ள ஐந்து மீட்டர் அளவிற்கு மணல் பகுதி எடுக்கப்பட்டு பின்பு தான் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும். இது ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. இந்த பணி 150 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு கச்சேரி சாலை வரை செல்ல உள்ளது. இதனிடையே இந்த சுரங்கம் தோண்டும் பணியில் பல சிக்கல்கள் உள்ளன. அதனை சரியான முறையில் பயன்படுத்தி தான் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும். 2ம் கட்ட மெட்ரோ பணிகளில் அதிகப்படியான சவால்கள் உள்ளது.

இதில் அதிக தொலைவு கொண்டது திருமயிலை ரயில் நிலையம் தான். அதுவரை உள்ள பாறைகளை சரியான முறையில் உடைத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் 42 கி.மீ. 43 ரயில் நிலையங்கள் கொண்டுவரப்பட உள்ளது. 2ம் கட்டம் பணி 10 இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் ஒவ்வொரு மாதமும் மீதமுள்ள 23 இடங்களில் பணிகள் தொடங்க உள்ளோம். இந்த பணி அடுத்த வருடம் நவம்பர் 25ம் தேதிக்குள் முடிவடையும். மழைக்காலத்தில் மட்டும் பணி நேரம் குறைக்கப்பட்டு பணி கொஞ்சம் மெதுவாக நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மெரினா கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பணியை தொடங்கியது பிளமிங்கோ மிஷின் appeared first on Dinakaran.

Tags : Flamingo Machine ,Marina Lighthouse ,Thirumailai ,Chennai ,Flamingo ,Chennai Marina Lighthouse ,Dinakaran ,
× RELATED மெரினா கலங்கரை விளக்கம் அருகே...