×

விமான நிலைய குப்பை தொட்டியில் ஆதார், அடையாள அட்டைகள்: அதிகாரிகள் விளக்கம்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வருகை பகுதி குப்பை தொட்டி அருகே ஆதார், பான் கார்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் குவியலாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச ஒருங்கிணைந்த விமான முனையத்தின் வருகை பகுதி ஆறாவது வாசல் அருகே, குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில் நேற்று காலை ஆதார், பான் கார்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் போன்றவை குவியல், குவியலாக கொட்டப்பட்டு கிடந்தன. இதை கண்ட விமான பயணிகள் அவற்றை ஆர்வத்துடன் எடுத்து பார்த்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை தடுத்தனர். இவற்றை விமான நிலைய ஊழியர்கள் தான் வந்து கொட்டி உள்ளனர். அவர்கள் வந்து அள்ளி சென்று விடுவார்கள் என்று கூறினார்கள். இந்திய மக்களின் முக்கிய அடையாள ஆவணம் ஆதார் கார்டு. மக்களின் வருமான வரிக்கான நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு போன்றவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சர்வதேச விமான நிலையத்தில், குப்பைத்தொட்டி அருகில் குவியலாக கொட்டப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே பயணிகள் கொண்டு வரும் ஆதார் கார்டுகளை சிலர் தவறுதலாக விட்டு செல்கின்றனர். சில பயணிகள் கைகளில் இருந்து தவறி கீழே விழுந்து விடுகின்றன. இதேபோல் கேட்பாரற்று விமான நிலையத்திற்குள் கிடக்கும் கார்டுகளை விமான நிலைய ஊழியர்கள் எடுத்து வந்து விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைப்பார்கள். அங்கு குறிப்பிட்ட காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும். கார்டுகளை தவறவிட்டவர்கள் வந்து பெற்று செல்வார்கள். ஆனால் நீண்ட காலமாக யாரும் வராமல் தேங்கி கிடக்கும் கார்டுகளை இதேபோல் குப்பையோடு சேர்த்து விடுகிறோம்.

இந்த கார்டுகளை முன்பு அஞ்சல் துறை மூலம் கார்டுகளில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தன. ஆனால் தற்போது கார்டுகளை தவறவிட்டவர்கள் இணையதளம் மூலமாக புதிய ஆதார் கார்டுகள் பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். எனவே, கார்டுகளை தவற விட்டவர்கள் மீண்டும் வந்து கார்டுகளை கேட்பதும் இல்லை. அதேபோல் அஞ்சல் துறையும் முன்புபோல் இந்த கார்டுகளை திருப்பி அனுப்புவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. எனவேதான் வேறு வழி இல்லாமல் குப்பையில் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post விமான நிலைய குப்பை தொட்டியில் ஆதார், அடையாள அட்டைகள்: அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Chennai ,Chennai International Airport ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...