×

கணக்கில் வராத ரூ3.5 லட்சம் பறிமுதல்: சார்பதிவாளரிடம் விடிய விடிய விசாரணை

விருத்தாசலம்: விருத்தாசலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3.5 லட்சம் ரொக்கம் சிக்கியது. இது தொடர்பாக சார் பதிவாளர், உதவியாளரிடம் போலீசார் அதிகாலை 1.30 மணி வரை விசாரணை நடத்தினர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை-பொன்னேரி பைபாஸ் சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு விருத்தாசலம் பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் நிலம், இடம், வாங்குவது விற்பது, அடமானம் செய்வது, திருமண பதிவு உள்ளிட்ட பத்திர பதிவு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா (37). இந்நிலையில் இவர் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் அதிக அளவு லஞ்சம் பெறுவதாக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் சார்பதிவாளர் அறையில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார் வீட்டுமனை வாங்குவதற்கு 10 வீட்டுமனைகள் முன் பதிவு செய்திருந்ததும், இதற்காக தவணை முறையில் 42 லட்சம் ரூபாய் இதுவரை கொடுத்ததும் நேற்று அவ்வாறு கொடுப்பதற்காக மூன்றரை லட்சம் ரூபாய் தனது அறையில் வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக செயல்பட்டு வந்த உதவியாளராக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் உதயகுமார் என்பவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பத்திரபதிவு செய்யும் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இன்று அதிகாலை 1.30 மணி வரை விசாரணை நடத்திய போலீசார் பின்னர் இருவரையும் அனுப்பி வைத்தனர். இன்று காலை மீண்டும் விசாரணைக்கு நேரில் வருமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத 3.5 லட்சம் ரூபாய் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, சார் பதிவாளர், உதவியாளர் சிக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் வாங்கி குவித்தாரா?
விருத்தாசலம் சார்பதிவாளர் மீது ஏற்கனவே பல புகார்கள் வந்தன. இவர் பணமாக லஞ்சம் வாங்குவதில்லை என்றும், ஏதாவது நகைக்கடையில் தங்கநகை ஆர்டர் செய்து விட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் பணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு கூறிவிடுவாராம். சம்பந்தப்பட்ட நபரும் அந்த தொகையை ஆன்லைனில் செலுத்தி விடுவாராம். இவ்வாறு ஏராளமான நகைகள் வாங்கி குவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post கணக்கில் வராத ரூ3.5 லட்சம் பறிமுதல்: சார்பதிவாளரிடம் விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vriddhachalam ,Vriddhachalam Deeds Office ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம்