×

வாய்துர்நாற்றம் தடுக்கும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு வாய்துர்நாற்றம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிலர் புகைப்பதால், மது அருந்துவதால், நன்றாக பல் துலக்காமல் இருப்பதால்தான் வாய் துர்நாற்றம் வருகிறது என எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும். காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல.

வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும். ஏனென்றால், வாய்துர்நாற்றம் என்பது உடலில் இருக்கும் கோளாறுகளை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகவும் இருக்கின்றன. எனவே, நீண்ட நாட்கள் தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால் மருத்துவரிடம் அணுகி உரிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வாய்துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது? அதை தடுக்கும் வழிகள் என்னவென்று பார்ப்போம்:

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்

பொதுவான காரணங்களில் முக்கியமாக பார்க்கப்படுவது, வாய் வறண்டு போதல். வாய் அடிக்கடி வறண்டு போகும்போதுதான், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. வாய் வறண்டு போவதற்கான் காரணங்கள் என்று பார்த்தால், தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவை வாய் வறண்டு போவதற்கான காரணங்களாகும். மேலும், சர்க்கரைநோய், சிறுநீரக நோய்கள், நுரையீரல் நோய்கள், கல்லீரல் நோய்கள், புற்றுநோய் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் வாய் சீக்கிரம் வறண்டு போகும். எனவே இவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை ஏற்படும். நோய்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகளின் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

இதுதவிர, சில உணவு பொருட்களை அடிக்கடி உட்கொள்வதாலும், வாய்துர்நாற்றம் ஏற்படுகிறது. பூண்டு, வெங்காயம் போன்ற உணவு வகைகளில் மணமுள்ள சல்ஃபர் உள்ளது. பால், இறைச்சி, மீன் போன்றவற்றில் அடர்த்தியான புரதம் உள்ளது. இவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன. காபி, ஜூஸ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவையும் இந்த பாக்டீரியாக்கள் உருவாகக் காரணமாகின்றன. எனவே, இவை அதிகமாக உட்கொள்பவர்களுக்கும் வாய்துர்நாற்றம் ஏற்படுகிறது.

அடுத்து, சரியான பல் பராமரிப்பு இல்லையென்றாலும் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. காரணம், இறந்த செல்களை தோல் தானாகவே வெளியேற்றுவது போல், பல்லால் வெளியேற்ற இயலாது. பல்லை தினமும் சுத்தம் செய்வதன் மூலம் மட்டுமே பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். பல் பராமரிப்பில் கவனக்குறைவாக இருந்தால், வெளியேற்றப்படாத பாக்டீரியாக்கள் பல்லின் மேல் படலமாகப் படிந்துவிடும். இது `பற்காரை’ எனப்படும். இதுவும் துர்நாற்றத்துக்கு காரணமாக அமையும்.

அதுபோன்று, அல்சர் பிரச்னை இருப்பவர்களுக்கும் வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், பொதுவாக பாக்டீரியா தொற்றால் அல்சர் பிரச்னை உருவாகிறது. குறிப்பாக ஹெலிகோபாக்டர் பைலரி(Helicobacter pylori)என்ற பாக்டீரியாவால் வயிற்றுப்புண் உருவாகிறது. இந்த ஹெலிகோபாக்டர் பைலரி பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ரிவோடெல்லா இன்டர்மீடியா (Prevotella intermedia) என்ற மற்றொரு வாய் துர்நாற்றத்தை உருவாக்கக்கூடிய முக்கியமான பாக்டீரியா தொற்றும் உருவாகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வாய் துர்நாற்றம் எழும்போது எதனால் ஏற்படுகிறது என்பதை மருத்துவரிடம் சென்று பரிசோதித்து அதற்கான சிகிச்சை எடுப்பதே நல்லது.காலையிலிருந்து சாப்பிடாமல் வெறும் வயிற்றிலேயே இருந்தால், வயிற்றில் அமிலச் சுரப்பு உண்டாகும். இதுவும் துர்நாற்றத்துக்குக் காரணமாக அமையும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

துர்நாற்றம் போக்கும் வழிகள்

* போதுமான அளவு தண்ணீர் குடித்தால், வாய் வறண்டுபோவதைத் தடுக்க முடியும். வாயில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களும் உணவுத் துகள்களும் வாய் துர்நாற்றத்துக்கான முதன்மைக் காரணங்களாகும். இவை தண்ணீர் அடிக்கடி குடிக்கும்போது, வாயிலிருந்து வெளியேற்றப்படும்.

* சிகரெட், புகையிலை சார்ந்த பொருட்கள் வாயை வறண்டு போகச் செய்து துர்நாற்றத்தை வாயிலேயே தங்கியிருக்கச் செய்துவிடும். எனவே, அவற்றை தவிர்த்துவிடுவது நல்லது.

* தினமும் இரண்டு முறை பல் துலக்குவதால் பல் இடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுப் பொருட்களை வெளியேற்றவும், பல்லில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கவும் உதவும். எனவே, வாய்துர்நாற்றம் உள்ளவர்கள், இரவு தூங்கப்போவதற்கு முன்னர் ஒரு முறை பல் துலக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

* மிட்டாய்கள், பபுள் கம்களை சாப்பிடுவதும் நல்ல பலன் தரும். இவற்றை சாப்பிடும்போது, வாயில் அதிக அளவில் உமிழ்நீர் சுரக்கும். இதனால் வாய் வறண்டு போகாது.
உற்பத்தியாகும் உமிழ்நீர் வாயிலுள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். இதனால் துர்நாற்றம் குறையும். சர்க்கரைநோயாளிகள் இவற்றைத் தவிர்த்துவிடலாம். இதேபோல் கிராம்பு, சீரகம் போன்றவற்றையும் மெல்லலாம். உணவு உண்ட பிறகு கேரட், ஆப்பிள் போன்றவற்றைச் சாப்பிட்டால், உமிழ்நீர் சுரப்பு அதிகமாகும். இதுவும் துர்நாற்றம் போக்க நல்ல தீர்வு தரும்.

The post வாய்துர்நாற்றம் தடுக்கும் வழிகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா?