×

பாதாளத்திலிருந்து சிகரம் உயர்த்தும் தண்டநாதா

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 16

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

பஞ்ச தன்மாத்ர ஸாயகா
(பஞ்ச தன்மாத்ர ஸாயகாயை நமஹ)

இந்த நாமத்தின் பொருளை பார்க்கும் முன்பு சென்ற நாமமான மனோரூபேஷு கோதண்டா என்கிற நாமத்தைக் குறித்து நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் எட்டாவது நாமம் முதல் பதினோராவது நாமம் வரை அம்பிகையின் ஆயுதங்களுக்குரிய தத்துவங்கள் விவரிக்கப்படுகின்றன. இதில் சென்ற நாமங்களில் ராக துவேஷம் என்றழைக்கப்படும் விருப்பு வெறுப்புகளை தன்னிடம் அம்பாள் எப்படி லயப்படுத்திக் கொள்கிறாள் என்பதை பார்த்தோம். எந்த மன்மதன் மனதை கலங்கடித்தானோ அவனையே கரும்பு வில்லாக ஏந்திக்கொண்டு நிற்பதையும் பார்த்தோம்.

இனி இந்த மனம் குறித்த கவலை உங்களுக்கானது இல்லை. அவளே அதை இயக்குவாள். இதுதான் நம் வாழ்வில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இந்த மனம் எதை அடிப்படையாக வைத்து செயல்படுகின்றது. மனம் இந்திரியங்களின் அடிப்படையில்தான் செயல்படுகின்றது. பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்ச கர்மேந்திரியங்கள். இந்த பத்து விதமான இந்திரியங்களின் அசைவுகளின் அடிப்படையில்தான் மனம் செயல்படுகின்றது. கண் பார்க்கின்றது. காது கேட்கின்றது. மூக்கு நுகர்கின்றது. நாக்கு சுவைக்கின்றது.

தோல் தொடு உணர்ச்சியை உணர்கின்றது. இதிலிருந்து வரும் அனுபவங்கள் எல்லாவற்றையும் தொகுத்து வைத்துக் கொண்டு, அந்த அனுபவங்களை பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது. இந்த அனுபவங்கள் கொடுக்கும் இன்பங்களை மீண்டும் மீண்டும் அனுபவிக்கவும், அதில் வலி இருந்தால் மீண்டும் அந்த வலியிலிருந்து மீளவும் இடையறாது முயற்சித்துக் கொண்டே இருக்கின்றது. இன்பமும் துன்பமும் இவ்வாறு மாறிமாறி வந்து கொண்டேயிருக்கும் தன்மையே மனதின் ஆதாரமாக உள்ளது. அதனால், மனம் என்பதே இந்திரியங்களினால் வரும் அனுபவங்களை தொகுத்து வைத்துக் கொள்ளும் கேந்திரமாக விளங்குகின்றது.

இதுவே வாசனை. இந்த வாசனையே அம்பு களாக மேல் மனதை தாக்கும்போது இந்த அனுபவம் வேண்டும்… அந்த அனுபவம் வேண்டும் என்று தேடித்தேடி ஓடுகின்றோம். இப்போது இந்த மனதிற்கும் ஆதாரமாக உள்ளவை பஞ்ச தன்மாத்திரைகள். இந்த பஞ்ச தன்மாத்திரைகளுக்கும் ஆதாரமாக இருப்பது பஞ்ச பூதங்களாகும். இந்த பஞ்ச பூதங்களே மனதில் பஞ்ச தன்மாத்திரை என்று சூட்சும வடிவமாக உள்ளது. இவையே இந்திரியங்களின் தன்மையை வடிவமைக்கின்றது. பஞ்ச பூதங்கள் எப்படி நம்முடைய மனம் வரை விரிந்துள்ளன என்பதை புரிந்து கொண்டோமானால், நம் மனம் என்பது நம்முடையதே அல்ல என்பதும் புரியும். அதனை இயக்கு திறன் முற்றிலும் அம்பிகையினுடையதே ஆகும்.

இந்த பஞ்ச தன்மாத்திரைகளையும் அம்பிகை தன் கரங்களில் பாணங்களாக ஏந்தியிருக்கின்றாள் என்று சொன்னோம் அல்லவா? அவை என்னென்ன என்று பார்ப்போமா? அம்பாள் தன்னுடைய வலது மேல் கரத்தில் ஐந்து விதமான புஷ்பங்களை அம்புகளாக வைத்துக் கொண்டிருக்கிறாள். அதாவது தாமரை, செங்கழுநீர், செவ்வல்லி, செவ்வாம்பல், மாம்பூ போன்றவை ஆகும். இந்த பாணங்கள் உணர்த்தும் விஷயம் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாணங்களின் சூட்சும உருவானது வெளியில் நாம் பார்க்கும் பஞ்ச பூதங்களிலிருந்து வந்தவை ஆகும்.

முதல் பூதமான ஆகாசமானது சப்தம் மற்றும் ஒலியைக் குறிக்கின்றது. இரண்டாவது வாயு. தொடு உணர்ச்சியை குறிப்பது. மூன்றாவதான அக்னியானது உருவம் நிறம் எனும் பார்த்தலைக் குறிப்பது. நான்காவதான நீர் என்பது சுவையை குறிக்கின்றது. ஐந்தாவதான பிருத்வீ என்கிற பூமியானது மணம் மற்றும் கந்தம் என்பதை குறிக்கின்றது. மீண்டும் முதலிலிருந்து வருவோம். உத்யத்பானு சஹஸ்ராபா என்கிற நாமத்தில் அம்பாளின் ஆத்ம தரிசனம் கிடைத்து விடுகின்றது. அடுத்தடுத்த நாமங்களில் ராக துவேஷங்கள் அடங்குகின்றது. குரோதங்கள் லயமாகின்றன.

பின்னர் இவற்றிற்கு காரணமான மனம் அடங்குகின்றது. ஆனால், இந்த மனம் அடங்க வேண்டுமென்றால் இந்திரியங்கள் அடங்க வேண்டும். நேரடியாக இந்திரியங்களை அடக்க முடியுமா என்றால் அவ்வளவு எளிதானது அல்ல அது. அதனால், இந்திரியங்களின் தன்மாத்திரைகள்தான் அடங்க வேண்டும். பஞ்ச பூதங்களை இந்த இந்திரியங்களோடு தொடர்புபடுத்துவதே தன் மாத்திரைகள் என்பதை அடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டும். வெளியிலுள்ள பஞ்ச பூதங்கள் நம்மிடையே உள்ள இந்திரியங்களாக எப்படி பரிணமிக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தன்மாத்திரைகள் ஓசை, உணர்ச்சி, பார்த்தல், ருசித்தல், மணத்தல் என்று தொடர்ந்து இந்திரியங்களை தொழிற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. இந்த ஐந்து உணர்ச்சிகளைத்தான் நம் வாழ்வு முழுவதும் செய்து கொண்டேயிருக்கின்றோம். இதன் மூலம் வரும் இன்பங்களே நம் வாழ்வு முழுவது தொடர்கின்றது. அதனாலேயே இந்த தன் மாத்திரைகளையும் அம்பிகை தன் கரங்களில் ஏந்துகின்றாள். உன்னால் இந்த தன் மாத்திரைகளை கையாளத் தெரியாது. அதையும் நானே செய்கின்றேன். அதையும் என்னிடம் அளித்து விடு. உன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஏதேனும் செய்ய முடியும் என்று எண்ணி எண்ணி குமையாதே. இதன் வேலை என்னவோ அதை நானே செய்வேன். இதை நீ புரிந்து கொள். இந்த அம்புகள் உன் மீது படும்போது ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?

முதல் அம்புக்கு ஹர்ஷணம் என்று பெயர். அதாவது இந்திரியங்களை மகிழ்விக்கும். இரண்டாது ரோசனம். அதாவது சுவையூட்டுவது. மூன்றாவது மோகனம். அதாவது மயக்குவது. நான்காவது சோஷணம். வற்ற வைப்பது. ஐந்தாவதாக மாரணம். மாய்ப்பது என்ற பொருளில் இந்த பஞ்ச பாணங்களும் மனதை ஒரு வழி செய்து விடுகின்றன. மேலே சொன்ன அனுபவமில்லாத மனிதர்களே ஜீவன்களே உலகில் இல்லை எனலாம்.

இந்த அம்புகளை ஒரு பக்தன் அம்பிகையிடம் அளித்து விட வேண்டும். அவள் அதை வைத்திருந்தால் தேவியினால் விரும்பத்தக்க அனுபவங்களை அந்த அம்பைக் கொண்டே தருவாள். நம்முடைய மனம் பரவாயில்லை இந்த அம்புகளை நாமே கையில் எடுத்துக் கொண்டால் இலக்கு வெறும் இந்த உலக இன்பங்கள்தான். அதன் மூலம் சின்னச் சின்ன சிற்றின்பங்கள்தான். அவை பறந்து போனவுடன் மனதினால் உணரப்படும் வலிகள். மீண்டும் சிக்கிக் கொண்டு விடுவோம்.

ஒரு பக்தனுக்குள் ஞானோதயம் நிகழும்போது ஜீவனின் அடிப்படை விஷயங்களாக உள்ள அனைத்துமே அந்த அம்பிகையின் கரங்களுக்குள் சென்று விடுகின்றன. இனி அவனை எந்த மனமும் பந்தப்படுத்தாது. அதாவது மேல் மனம் முதல் அடி மனம் வரையிலும் உள்ள அனைத்தும் அம்பிகையிடம் சென்று சேருகின்றது. கரும்புவில்லுக்கு ராஜ சியாமளா அதாவது மாதங்கி. பாசத்திற்கும் அங்குசத்திற்கும் அஸ்வாரூடா, சம்பத்கரி என்று பார்த்தோம். இப்போது இந்த அம்புகளுக்கு அதிஷ்டான தேவதையாக தண்டநாதா என்கிற மகா வாராஹி சொல்லப்படுகின்றது.

இந்த பஞ்ச பாணங்களிலிருந்து தோன்றியவள்தான் மகா வாராஹி. அப்போது வாராஹி கூறும் தத்துவம் என்னவெனில் நம்முடைய அடிப்படையான தன் மாத்திரை அளவினில் மாற்றத்தை நிகழ்த்தவல்லதே வாராஹி. நம்முடைய மனம் எந்த ஐந்து பூதங்களினால் உருவாகி வருகின்றதோ அதை சரி செய்யும் தேவதையே வாராஹி. வாராஹியானவள் வெளி நோக்கி இருந்த இந்திரியங்களை அதாவது பிரபஞ்சத்தை நோக்கியிருந்த இந்திரியங்களை உள்நோக்கி திருப்புகின்றது.

எங்கு இந்திரியங்கள் என்கிற விஷயங்கள் உருவாகி வருகின்றதோ அங்கேயே இந்திரியங்களை வெளிவிடாமல் ஒடுக்கிக் கொள்கின்றது. அதனாலேயே ‘‘அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும்’’ வாராஹி என்று சொல்கிறோம். அகந்தை என்கிற அவித்யையை பிடுங்கி எறிபவளே வாராஹி. எனவே, பஞ்ச தன்மாத்ர ஸாயகா எனும் நாமத்தைச் சொல்லுங்கள் மனதைத் தாண்டிச் செல்லுங்கள்.

(சக்தி சுழலும்)

நாமம் சொல்லும் கோயில்

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவி. ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும்படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் சப்த மாதர்களில் தலையானவள் இந்த வாராஹி. மகாகாளி, தாருகாசுரனோடு போர் புரிந்தபோது அவளுக்குத் துணை நின்றவள். யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி. சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள்.

சிங்கமதை வாகனமாய்க் கொண்டு மூவுலகங்களையும் ஆளும் லலிதா பரமேஸ்வரியின் சேனா நாயகியாய் விளங்குபவள், இந்த அம்பிகை. லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ – தண்டநாதா பக்தர்களால் போற்றப்படுகிறாள். இப்படிப்பட்ட வாராஹி மூல ரூபமாக விளங்குபவளே திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி. இத்தல அம்பிகையை வழிபட்டாலே வாராஹியை வழிபட்டதற்கு இணையாகும். ஆனாலும், நாம் பள்ளூர் என்கிற இன்னொரு தலத்தையும் இதோடு இணைத்துக் கொள்ளலாம்.

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபராசக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. காசியில் தனிக்கோயில் கொண்ட இந்த தேவிக்கு பள்ளூரிலும் ஓர் ஆலயம் உள்ளது. ஆலயத்தின் முகப்பில் சங்கு, சக்கரம், அபயம், வரதம் தாங்கிய திருக்கோலத்தில் வாராஹி தேவி அருள்கிறாள். இருபுறங்களிலும் தேவியின் தோழியர் சாமரம் வீசி அன்னையை குளிர்விக்கின்றனர். கோபுர வாயிலின் இரு உள்புற சுவர்களிலும் பிரத்யங்கரா, ஸ்வர்ணாகர்ஷண பைரவர் போன்றோர் சித்திர வடிவில் அருள்கின்றனர்.

அர்த்தமண்டபத்தின் முகப்பிலும் வாராஹி தேவியின் இரு புறங்களிலும் இரு சிங்கங்கள் அரோகணிக்க கம்பீரமாக அருள்கிறாள். பிராகார வலம் வருகையில் மந்திரகாளியம்மனின் திருவுரு இத்தலத்தில் அருளியதன் நினைவாக சிறிய வடிவில் தோழியருடன் கோஷ்டத்தில் அவள் சிலை நிறுவப்பட்டுள்ளது. வேப்பமரம், தலமரம். பிராகார சுற்றுச்சுவர்களில் பேரெழிலுடன் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி போன்றோரும், சப்தமாதர்களும் சுதை வடிவில் அருள்கின்றனர். கருவறை கோபுரத்தில் வாராஹி, வைஷ்ணவி, மகாலட்சுமி போன்றோர் பொலிவுடன் திகழ்கின்றனர்.

ஆலயவலம் வந்து சங்கு, சக்கரம் ஏந்திய துவாரபாலகியரின் அனுமதி பெற்று பலிபீடம், சிங்கத்தை அடுத்து, கருவறையின் வலதுபுறம் விநாயகப்பெருமானை தரிசிக்கிறோம். மூலக்கருவறையில் இரு வாராஹிகளை தரிசிக்கலாம். ஒருவர், சிறு வடிவிலான ஆதிவாராஹி; அடுத்தவர் பெரிய வடிவிலான தற்போதைய வாராஹி. இந்தப் பெரிய வாராஹியின் பீடத்தில் ஆறு மாதர்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எருமை வாகனத்தில், பத்மாசனத்தில், நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அபய-வரத முத்திரைகள் தாங்கி தெற்கு நோக்கி அருள் பொங்க வீற்றிருக்கிறாள்.

பூமியையே தன் பன்றி முகக் கொம்புக்கிடையில் தாங்கி காத்தருளிய மஹாவிஷ்ணுவைப்போல இந்த உலகோர் அனைவரையும் தன் பன்றிமுக அருட் பார்வையால் காத்து ரட்சிக்கிறாள் வாராஹி. தன் அங்க தேவதையான லகு வார்த்தாலியையும், பிரத்யங்க தேவதையான ஸ்வப்ன வாராஹியையும், உபாங்க தேவதையான திரஸ்கரணியையும் தன்னுள்ளே ஏற்றிருக்கிறாள். தன் முன்னே நிறுவப் பட்டுள்ள ஸ்ரீசக்ரத்தின் மூலம் மேலும் தன் சக்தியை மகோன்னதமாக்கி பக்தர்களை வளப்படுத்துகிறாள்.

ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி தினங்களில் இந்த அன்னையின் சந்நதியில் வாழை இலையில் அரிசியைப் பரப்பி உடைத்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள். வாழ்வின் அதலபாதாளத்தில் சரிந்தவர்களையும் அன்னை சிகரத்தின் மேல் அமர்த்துகிறாள். காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ளது பள்ளூர்.

பிரச்னைகள் தீர்க்கும் லலிதா சகஸ்ரநாம பரிகாரம்

ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி தினங்களில் இந்த அன்னையின் சந்நதியில் வாழை இலையில் அரிசியைப் பரப்பி உடைத்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள், பக்தர்கள். வாழ்வின் அதலபாதாளத்தில் சரிந்தவர்களையும் அன்னை சிகரத்தின் மேல் அமர்த்துகிறாள். செவ்வாய்க் கிழமைகளிலும், மற்ற நாட்களில் செவ்வாய் ஹோரை நேரத்திலும் இந்த அன்னையை மாதுளை முத்துக்களால் அர்ச்சிக்க, செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடுகிறது. அபிஷேகம் செய்து சிவப்பு நிற துணியை சாற்றி செவ்வரளிப் பூக்களால் அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கலை நிவேதிக்க தொழில் வளம் பெருகுகிறது.

The post பாதாளத்திலிருந்து சிகரம் உயர்த்தும் தண்டநாதா appeared first on Dinakaran.

Tags : Dandanatha ,Shakti ,Lalita Sahasranamams ,Ramya Vasudevan ,Thandanatha ,
× RELATED ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்: கற்றலின் கேட்டல் நன்று!