×

துபாயில் திருமணம் செய்த நிலையில் கர்ப்பிணி மனைவியை பார்க்க வந்த பாகிஸ்தான் இளைஞர் கைது: ஐதராபாத் மாமியார் வீட்டில் சிக்கினார்

ஐதராபாத்: ஐதராபாத்தில் இருக்கும் கர்ப்பிணி மனைவியை பார்க்க வந்த பாகிஸ்தான் இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். துபாயில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஃபைஸ் (24) என்பவர், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணை கடந்த 2019ல் சந்தித்தார். இருவருக்கும் காதல் ஏற்படவே அதே ஆண்டில் அவர்களுக்கு திருமணமானது. மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது. ஃபைஸின் மனைவி இந்தியாவுக்குத் திரும்பினார். அதன்பின் பெண்ணின் குடும்பத்தினர் முகமது ஃபைஸூக்கு போலி பிறப்பு சான்றிதழை ஏற்பாடு செய்து, அதன் மூலம் அவரை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்தனர்.

அதன்படியே நேபாள எல்லை வழியாக அவரை ஐதராபாத் அழைத்து வந்தனர். இந்நிலையில் உளவு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஐதராபாத்தில் மாமியார் வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த முகமது ஃபைசை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பகதூர்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசாத் பாபா நகரில் வசிக்கும் தனது கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஃபைஸ் என்பவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளார். அவரை தற்போது கைது செய்துள்ளோம்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் ஸ்வாட் பள்ளத்தாக்கைப் பூர்வீகமாகக் கொண்ட ஃபைஸ், நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து, கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியைச் சந்திக்க ஐதராபாத் வந்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். முகமது ஃபைஸிடம் இருந்து பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம்’ என்றனர்.

The post துபாயில் திருமணம் செய்த நிலையில் கர்ப்பிணி மனைவியை பார்க்க வந்த பாகிஸ்தான் இளைஞர் கைது: ஐதராபாத் மாமியார் வீட்டில் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Hyderabad ,
× RELATED 2028ல் ஐ.நா சுற்றுச்சூழல் மாநாடு நடத்த...