×

சேத்துப்பட்டில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் திடீர் பரபரப்பு; துப்பாக்கி சுத்தம் செய்யும் போது வெடித்து காவலாளி படுகாயம்: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சேத்துப்பட்டில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது திடீரென துப்பாக்கி வெடித்ததால் வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் எஸ்ஐஎஸ் என்ற பெயரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மூலம் ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு சென்று நிரப்பும் பணியை செய்து வருகின்றனர். இந்நிலையில், செக்யூரிட்டி நிறுவனத்தில் ராணா சிங்(30) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை தனது டபுள் பேரல் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியின் விசையில் தவறுதலாக கை பட்டதில் துப்பாக்கி வெடித்தது. இதில் ராணா சிங் இடது பக்க வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது, காவலாளி ராணா சிங் உயிருக்கு போராடினார். உடனே சக காவலாளிகள் ராணா சிங்கை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராணா சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தவறுதலாக வெடித்த துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post சேத்துப்பட்டில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் திடீர் பரபரப்பு; துப்பாக்கி சுத்தம் செய்யும் போது வெடித்து காவலாளி படுகாயம்: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sethupatti Private Security Agency ,Chennai ,Sethupattil Private Security Agency ,Private Security Agency ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...