
மும்பை: லடாக்கில் வாழும் மக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 3-வது கட்ட ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு பின் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தினர்.
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி; சுமூகமான முறையில் தொகுதிப் பங்கீட்டை நடத்தி முடிப்போம். வரும் தேர்தலில் மோடியை இந்தியா கூட்டணி தோற்கடிப்பது நிச்சயம். இந்தியாவின் நம்பகத்தன்மையை காப்பாற்ற பிரதமர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பறித்து குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு வழங்குவதே மோடி அரசின் இலக்கு. ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். இந்தியா கூட்டணி பாஜகவை நிச்சயமாக வீழ்த்தும். மக்களின் ஒற்றுமையே இந்தியா கூட்டணியின் பலம்.
தலைவர்களிடையே நல்ல புரிந்துணர்வையும் நட்புணர்வையும் இந்தக் கூட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன. கருத்து வேறுபாடுகளை களைவதில் சிறந்த புரிதலோடு தலைவர்கள் செயல்படுகின்றனர். ஊடகங்களையும் தழைகளில் இருந்து விடுவிக்க இந்தியா கூட்டணி உறுதி பூண்டுள்ளது. ஒரு வாரமாக நான் லடாக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தேன். இந்தியா மண்ணை சீனா அபகரித்து விட்டதாக பாங்காங் ஏரி பகுதியில் வாழும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர். லடாக்கில் வாழும் மக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டது. லடாக்கின் பாங்காங் ஏரியில் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டவர்கள், சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து என்னிடம் முறையிட்டனர் இவ்வாறு கூறினார்.
The post லடாக்கில் வாழும் மக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.