×

ஆதித்யா எல்1 திட்டம்: சூலூர்பேட்டை செங்கலம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை..!!

திருப்பதி: ஆதித்யா எல்1 திட்டம் தொடர்பாக சூலூர்பேட்டை செங்கலம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை நடத்தினார். சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. நிலவில் இருந்து பல்வேறு தகவல்களை பிரக்யான் ரோவர் அனுப்பி வருகிறது. சந்திரயான்-3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்ததாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பவுள்ளது.

இதற்கான ஒத்திகை ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்நிலையில், ஆதித்யா எல்1 திட்டம் தொடர்பாக சூலூர்பேட்டை செங்கலம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை செய்தார். பிஎஸ்எல்விசி 57 ராக்கெட் மாதிரியை சிறப்பு பூஜையில் வைத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆதித்யா எல்1 இன் கவுன்ட் டவுன் இன்று துவங்குகிறது. அது நாளை காலை 11.50 மணியளவில் விண்ணில் ஏவப்படும். ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் நமது சூரியனை ஆய்வு செய்வதற்காக உள்ளது.

இது எல்1 புள்ளியை அடைய இன்னும் 125 நாட்கள் ஆகும். இது மிகவும் முக்கியமான ஏவுதல். சந்திராயன்-4 குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை; விரைவில் அறிவிப்போம். ஆதித்யா எல்1க்குப் பிறகு, எங்களின் அடுத்த வெளியீடு ககன்யான், இது அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும். ஆதித்யா 15 லட்சம் கி.மீ. தொலைவில் லாங்ரேஜியன் பாயின்ட்1 சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்படும் என கூறினார். மேலும், சந்திரயான் -3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றும் சோம்நாத் தெரிவித்தார்.

The post ஆதித்யா எல்1 திட்டம்: சூலூர்பேட்டை செங்கலம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை..!! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chief Somnath ,Sengalamma Parameshwari Temple ,Sulurpet ,Tirupati ,Somnath ,Aditya ,
× RELATED சூரியனை ஆய்வு செய்வதற்காக...