×

ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பொன்னேரி: ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை ஆதித்யா விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வள துறை தடை விதித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், நாளை காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் இன்று தொடங்கியது.

ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி பழவேற்காடு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள், இன்று மாலை முதல் நாளை வரை கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம் திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள், தங்களது படகுகளை கடற்கரையோரம் நிறுத்தினர். பின்னர், வலைகள் மற்றும் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

The post ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,Palaveka ,Ponneri ,Palaverkota ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...